பாலின பாகுபாடு கொள்கை முடிவு ஒழிகிறது தேசிய ராணுவ அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி

புதுடெல்லி: ‘தேசிய ராணுவ அகாடமியில் இனிமேல் பெண்களும் சேர்க்கப்படுவார்கள்,’ என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. ராணுவத்தில் சேர்க்கப்படும் அதிகாரிகளுக்காக ‘தேசிய ராணுவ அகாடமி’ செயல்பட்டு வருகிறது. இதில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் பெண்கள் கலந்து கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்திருந்தது. இந்த தேர்வு ஆண்களுக்கு மட்டுமே என்றும் பாதுகாப்பு துறை அமைச்சகமும் தெரிவித்திருந்தது. இதனால், இந்த அகாடமியில் திருமணம் ஆகாத ஆண்கள் மட்டுமே சேர்ந்து பயிற்சி பெற முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இது, பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்கை முடிவு என்றும் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.

இந்த முடிவுக்கு எதிராக குஷ் கல்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கை தொடர்ந்து இருந்தார்.அதில், என்டிஏ தேர்வில் பெண்களும் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினார். இதை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 19ம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘ஒன்றிய அரசின் இந்த கொள்கை பாலின சமத்துவத்துக்கு எதிரானது. இந்திய சட்ட விதி 14, 15, 16 மற்றும் 19 ஆகியவைக்கு எதிரானது. பெண்களுக்கான சம உரிமையை இது மறுக்கிறது. அதனால், தேசிய ராணுவ அகாடமியின் நுழைவு தேர்வை பெண்களும் எழுத அனுமதி அளிக்க வேண்டும்,’ என தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஒன்றிய அரசு நேற்று விரிவான விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘தேசிய ராணுவ அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டு நடைபெறும் நுழைவுத் தேர்வில் பெண்களை அனுமதிப்பது சற்று சிரமமான காரியம். இது தொடர்பான புதிய விதிமுறைகளை உருவாக்க அரசுக்கு அவகாசம் தேவைப்படுகிறது. முப்படையின் தளபதிகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகே, ராணுவ அகாடமியில் பெண்களை சேர்க்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையில் பாலின சமநிலையை கொண்டு வருவது முக்கியமானது தான் என்றாலும், அதனை ஒரே நாளில் மேற்கொள்ள முடியாது. எனவேதான், இதை அமல்படுத்த அவகாசம் கேட்கப்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: