கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னையில் 16 தேர் இயக்கப்படவில்லை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கடந்த அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் சென்னையில் 16 தேர் இயக்கப்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, நன்னிலம் காமராஜ் (அதிமுக) பேசும்போது, ‘‘நன்னிலம் தொகுதி, குடவாசல் கோனேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய தேர் செய்து தர வேண்டும்” என்றார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து பேசும்போது, ‘‘திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிரஹன்நாயகி உடனுறை கோகேஸ்வரர் கோயிலுக்கு புதிதாக தேர் செய்வதற்காக ரூ.28 லட்சம் செலவில் ஒப்பந்தம் கோரப்பட்டு வருகின்ற 17ம் தேதி ஒப்பந்தம் திறக்கப்பட உள்ளது.

ஓடாத தேரை ஓட்டியவர் கலைஞர், என்றால் இன்றைக்கு புனரமைக்கப்பட வேண்டிய தேர்களை புனரமைத்து, தேவைப்படுகின்ற இடங்களில் ேதர்களை உருவாக்கி தருவதற்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார். அதன்படி விரைவில் இந்த கோயில் தேர் ஓடும். காமராஜ்: கடந்த ஆட்சியில் ரூ.37 லட்ச மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ரூ.25 லட்சம் என்கிற அளவில்தான் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கிறது. எனவே ரூ.37 லட்சத்தில் தேரை செய்ய வேண்டும். அமைச்சர் சேகர்பாபு: தேர் செய்ய தேவைப்படும் நிதியே ரூ.28 லட்சம்தான். தமிழகத்தில் 1,287 தேர்கள் இருக்கின்றன. இதுவரை நாங்கள் 200 தேர்களை கள ஆய்வு செய்துள்ளோம்.

சென்னையில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக 16 தேர்கள் இயக்கப்படாமல் உள்ளது. தேர்கள், தெப்பக்குளங்கள் போன்றவற்றிற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 9 தேர்களை புதுப்பிக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல் தேர்களின் கொட்டகைகளை சீர்செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓடாத தேர்களை ஓட்டுகின்ற அரசு இந்த அரசு. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மன மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள் என்றார்.

Related Stories:

>