×

குடியாத்தம் அருகே கவுண்டன்யா மகாநதி கால்வாய்களை தூர் வார வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

குடியாத்தம் : குடியாத்தம் அருகே கவுண்டயா மகாநதி கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம் நகரிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கவுண்டன்யா மகாநதியின் குறுக்கே மோர்தானா அணை கட்டப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் புங்கனூர், பலமனேர், நாயக்கனேரி உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் மழை பெய்தால் கவுண்டன்யா மகாநதியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் இந்த அணையில் தேக்கப்படுகிறது.

392 மீட்டர் நீளம் உள்ள இந்த அணையின் முழு உயரம் 23.89 மீட்டர் ஆகும். இதன் நீர்த்தேக்க உயரம் 11.5 மீட்டர் ஆகும். இந்த அணையின் கொள்ளளவு 262 மில்லியன் கனஅடி ஆகும். இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ஜிட்டப்பல்லி செக் டேமில் நிரம்பிய பின் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் வழியாக திறந்து விடப்படுகிறது. மேலும் கவுண்டன்யா ஆற்றின் வழியாகவும் தண்ணீர் செல்கிறது.

வலது, இடதுபுற கால்வாய்கள் மற்றும் கவுண்டன்யா மகாநதியில் திறந்து விடப்படும் தண்ணீரால் வழியில் உள்ள ஜிட்டப்பல்லி, கொட்டாரமடுகு, சேம்பள்ளி, ரங்கசமுத்திரம், அக்ராவரம், தட்டப்பாறை, பெரும்பாடி, பாக்கம், அம்மணாங்குப்பம், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்நிலையில், கடந்த சில நாட்களாக புங்கனூர், பலமனேர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் மோர்தானா அணைக்கு நீர்வரத்து தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகமானால் ஒரு சில வாரங்களில் மோர்தானா அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் செப்டம்பர் மாதமே அணை நிரம்பும் சூழ்நிலை உள்ளது. குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நீர்ஆதாரங்களில் நீர்மட்டம் உயரும்.

எனவே, வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் செடி, கொடிகளை அகற்றவும், ஏரிகளுக்கு செல்லும் பெரும்பாடி, அக்ரஹாரம், குடியாத்தம் நகரம் கவுண்டன்யா மகாநதி  ஆகியவற்றில் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர் வாரி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mahanadi ,Gudiyatham , Gudiyatham: Farmers demand that action be taken to divert water from the County Mahanadi canals near Gudiyatham
× RELATED கல்கி 2898 ஏடி ஜூன் 27ல் ரிலீஸ்