மணப்பாறை அருகே தொழில் போட்டியில் கதிர்அறுக்கும் இயந்திரத்தை கடத்திச்சென்ற 2 பேர் கைது-ரூ.22 லட்சம் மதிப்புள்ள இயந்திரமும் மீட்பு

மணப்பாறை : மணப்பாறை அருகே தொழில் போட்டியில் பெட்ரோல் பங்க் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கதிரடிக்கும் இயந்திரத்தை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து, கடத்தப்பட்ட இயந்திரத்தையும் மீட்டனர்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகேயுள்ள பாலக்குறிச்சி பெட்ரோல் பங்க் முன்பு கடந்த மாதம் 14ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த உடும்பியம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது கதிர்அறுக்கும் இயந்திரத்தை நிறுத்தியிருந்தார். அன்று இந்த இயந்திரத்தை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இதுகுறித்து, வளநாடு போலீசில் வெங்கடேஷ் புகார் செய்தார்.

இந்த புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க இல்லை என்றுக் கூறி கடந்த வாரம் குறைதீர் நாள் கூட்டத்தின்போது திருச்சி மாவட்ட அலுவலகத்தில் தீக்குளிக்க போவதாக வெங்கடேஷ் கூறியதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மணப்பாறை டிஎஸ்பி ஜனனிப்ரியா தனிப்படையை முடுக்கிவிட்டு கதிர் அறுக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க உத்தரவிட்டிருந்தார். டிஎஸ்பியின் தனிப்படை போலீசார் கடத்தல் நடந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வண்டியை ஓட்டிச்செல்லும் நபர் குறித்து கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று கதிர் அடிக்கும் இயந்திரம் பெரம்பலூர் மாவட்டம். பாடாலூர் அருகே உள்ள வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று அப்பகுதிக்கு சென்று 22 லட்சம் மதிப்புள்ள கதிர் அறுக்கும் இயந்திரத்தை மீட்டதோடு, அதனை திருடிச் சென்ற அரும்பாவூரை சேர்ந்த ரவீந்திரன் (38) மற்றும் தொண்டமாந்துரையை சேர்ந்த சின்னராசு (41) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

ஆத்திரத்தால் விபரீதம்

பெரம்பலூர் மாவட்டம் உடும்பியம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் நெல் அறுவடையின்போது வந்து கதிர் அறுக்கும் இயந்திரத்தை வைத்து வேலை செய்வது வழக்கம். தினசரி வேலை முடிந்தவுடன் பாலக்குறிச்சி பெட்ரோல் பங்க் முன்பு வண்டியை நிறுத்தி வைப்பார். இதுபோல அதே மாவட்டம். அரும்பாவூரை சேர்ந்த ரவீந்தரன் அருகிலுள்ள மேலத்தானியம் பகுதியில் கதிர் அடிக்கும் இயந்திர வண்டியை சொந்தமாக வைத்து வேலை செய்து வந்தார். வெங்கடேஷ்க்கு தினசரி வேலை கிடைத்ததால், ரவீந்தரன் வைத்துள்ள வண்டியை யாரும் அழைப்பதில்லையாம். இந்த ஆத்திரத்தில், வெங்கடேஷ்க்கு சொந்தமான வண்டியை தனது டிரைவர் சின்ராஜ் மூலம் கடத்தி தற்போது போலீசில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: