×

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லி நடமாடும் மருத்துவமனை வாகன டிரைவர்களிடம் ரூ.4 கோடி மோசடி

* பணி நிரந்தரம் பெற்றுத் தருவதாக வசூல் வேட்டை
* 150 பேர் திரண்டு வந்து சேலம் எஸ்பி ஆபீசில் புகார்

சேலம்: மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரைச் சொல்லி நடமாடும் மருத்துவமனை வாகன டிரைவர்களிடம் பணி நிரந்தரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி செய்த இருவர் மீது சேலம் எஸ்பி அலுவலகத்தில் 150 பேர் புகார் கொடுத்தனர். சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று மதியம், தமிழ்நாடு அரசு நடமாடும் மருத்துவமனை வாகன டிரைவர்கள் சுமார் 150 பேர் திரண்டு வந்தனர். அவர்களில் சேலம் சுரேஷ், மதுரை அந்தோணிஅமல்ராஜ், நாகை முகமது முபாரக், செய்யாறு குணசேகரன் ஆகியோர் ஒரு புகார் மனுவை கூடுதல் எஸ்பி பாஸ்கரனிடம் கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: பொது சுகாதாரத்துறையில் இயங்கும் நடமாடும் மருத்துவமனை வாகனத்தில், ஊர்தி ஓட்டுநர்களாக கடந்த 2008 முதல் தொகுப்பூதியத்தில், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். கடந்த 2018ம் ஆண்டு வாழப்பாடி அருகே பேளூர், பனமரத்துப்பட்டி, நெல்லை மாவட்டம் முக்கூடல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் டிரைவர்கள் 3 பேர், பணி நிரந்தரம் பெற்றுத் தருவதாக தமிழகம் முழுவதும் 200 பேரிடம் இருந்து ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்தனர். மொத்தம் ரூ.4 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளனர்.

கடந்த மே மாதத்திற்குள் பணி நிரந்தரம் பெற்றுத் தராவிட்டால், பணத்தை திரும்பத் தந்து விடுவதாக 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி கையொப்பமிட்டு தந்தனர். ஆனால் எங்களுக்கு பணி நிரந்தரம் பெற்றுத்தரவில்லை. இதுகுறித்து பணம் வாங்கிய சேலத்தைச் சேர்ந்த 2 பேரிடம் கேட்டபோது, அசிங்கமாக பேசி மிரட்டுகின்றனர். இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் புகார் மனு அளித்துள்ளோம். எங்களிடம் பணத்தை வாங்கி மோசடி செய்த சேலத்தை சேர்ந்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய நபராக இருக்கும் அதிமுக பிரமுகர் மூலம் தான், பணி நிரந்தரம் பெற்றுத் தரவுள்ளோம் எனக்கூறி, சேலத்தை சேர்ந்த இருவரும் ரூ.4 கோடி வசூல் செய்தனர். நாங்கள் பணம் கொடுத்ததற்கு ஆதாரமாக புகைப்படங்கள் உள்ளன. அந்த அதிமுக பிரமுகர் இறந்துவிட்டார். எங்களிடம் வசூலித்த பணத்தை தற்போது சேலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவரிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். அந்த மருத்துவரும் தான், ரூ.2 கோடி பெற்றிருப்பதாக கூறியிருக்கிறார். அதனால், உரிய விசாரணை நடத்தி, எங்களிடம் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டுத்தர வேண்டும்,’ என்றனர்.

Tags : Chief Minister ,Edappadi Palanisamy , Rs 4 crore scam against hospital drivers in the name of former chief minister Edappadi Palanisamy
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...