×

கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மூலம் வருவாய் ஈட்ட புதிய கொள்கையை உருவாக்க ஆலோசகர்கள் நியமனம்: அறநிலையத்துறையில் 1 கோடி மக்கள் நன்மை பயக்கும் வகையில் திட்டங்கள்; அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
* திருவேற்காடு தேவிகருமாரியம்மன் கோயில் உட்பட 30 அம்மன் கோயில்களுக்கு ரூ.16 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
* ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடங்களை பாதுகாக்கும் நோக்கோடு  சுற்றுச்சுவர் மற்றும் வனம் அமைப்பதற்கு ரூ.15 கோடி செலவிடப்படும்.  
* திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் கோயிலில் ரூ.50 லட்சத்தில் திருப்பணி மேற்கொள்ளப்படும்.
* மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

திருத்தேர் திருப்பணிகள் :
* சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோயிலுக்கு ரூ.2 கோடியில் புதிய வெள்ளித் திருத்தேர் செய்யப்படும்.
* இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு ரூ. 2 கோடியில் புதிய வெள்ளித் திருத்தேர் செய்யப்படும்.
* சென்னை மாதவரம்  கைலாசநாதர் கோயிலுக்குப் புதிய திருக்குளம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் :
* சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அன்னதான கூடம் மற்றும்  அடிப்படை வசதிகளுடன் கூடிய முடி காணிக்கை மண்டபம் ரூ.9 கோடி மதிப்பீட்டில்  அமைக்கப்படும்.
* சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 18 இடங்களில் உள்ள சிதிலமடைந்த வாடகைக் குடியிருப்புகளை அகற்றி விட்டு புதிய வணிக வளாகம், குடியிருப்புகள் மற்றும்  வாகனங்கள் நிறுத்துமிடம் ரூபாய் 15 கோடியில் கட்டப்படும்.
* சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரர் பங்களிப்போடு ரூ.2 கோடி செலவில் பணியாளர் குடியிருப்புகளும், பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்.

அசையா சொத்துக்களைப் பாதுகாத்து மேம்படுத்துதல் :
* சென்னை, வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பல்நோக்குக் கட்டிடம் ரூ.2 கோடியில் கட்டப்படும்.
* கோயிலுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களிலிருந்து கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் கொள்கைகளை உருவாக்கிட தேர்ந்த ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படுவர்.
* சென்னை, கொசப்பேட்டை ஆதி மொட்டையம்மன் கோயிலுக்குச் சொந்தமான சந்தை ரூ.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

பயிற்சிப் பள்ளிகள் மற்றும் நலப்பணிகள் :
*  சாதி  வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
* மாமல்லபுரம், ஆளவந்தார் அறக்கட்டளையில் ரூ.1 கோடியில் வைணவ பிரபந்த பாடசாலை ஏற்படுத்தப்படும்.
* சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்களில் ரூ.1 கோடி மதிப்பீட்டில், புதிய ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள்  ஏற்படுத்தப்படும்.
* திருத்தணியில் புதியதாக தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி ஏற்படுத்தப்படும்.
* ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் சார்பாக திவ்ய பிரபந்த பாடசாலை மீண்டும் தொடங்கப்படும்.
* ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயிலில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி புதியதாகத் தொடங்கப்படும்.

வணிக வளாகம் :
* திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்படும்.

இதர பணிகள் :
* திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படும். இந்த அறிவிப்புகள் அனைத்தும் ஒரு கோடி மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Minister ,Sekarbabu , Appointment of consultants to formulate a new policy to generate revenue from temple-owned assets: projects to benefit 1 crore people in the charitable sector; Announcement by Minister Sekarbabu
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...