×

ஏடிஎம்களில் 2 வாரமாக பணம் நிரப்பாததால் ஏலகிரி மலையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதி: அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் உள்ள ஏடிஎம் மையங்களில் இரண்டு வாரங்களாக பணம் நிரப்பாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் இந்த ஏலகிரி மலையில் 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரிமலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்குவதால் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இதனால் இங்குள்ள மலைவாழ் மக்கள் மற்றும் வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு வியாபாரங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவைகளை நடத்தி வருகின்றனர். இதனால் ஏலகிரி மலையில் பல்வேறு தொழில் காரணங்களுக்காகவும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் அத்தனாவூர் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட 2 வங்கிகள் இயங்கி வருகிறது. மேலும் இரு வங்கிகளின் மூலமாக தனித்தனியே இரண்டு ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் மையங்கள் வழியாக அரசு ஊழியர்கள் முதல் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் அன்றாடம் ஏடிஎம் மையத்தை பயன்படுத்தி பல்வேறு காரணங்களுக்காக பண பரிமாற்றம் செய்கின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள 2 ஏடிஎம் மையங்களிலும் இரண்டு வாரங்களுக்கும் மேலாக பணம் இல்லாமல் இங்குள்ள மலைவாழ் மக்கள் வணிகர்கள், சுற்றுலா பயணிகள் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பணம் எடுக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் அங்குள்ளவர்கள் தெரிவித்தும் அவர்கள் கண்டும் காணாமலும் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இங்குள்ள மலைவாழ் மக்கள் மற்றும் வணிகர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே வங்கி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு செயல்படாமல் உள்ள 2 ஏடிஎம் மையங்களையும் சீரமைத்து அனைத்து தரப்பினரும் ஏடிஎம் மையத்தை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்து கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Yelagiri hill , Public, tourists suffer in Yelagiri hills due to non-filling of ATMs for 2 weeks: Authorities demand action
× RELATED ஏலகிரி மலை சாலையில் 3 மாதங்களாக அவதி...