×

செங்கம் பகுதியில் ஏரி மதகு சீரமைக்க நடவடிக்கை: ஆய்வு செய்த அதிகாரி தகவல்

செங்கம்: செங்கம் பகுதியில் ஏரி மதகு சீரமைக்க பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். செங்கம் வட்டம் பச்சையம்மன் கோயில் அருகே செய்யாற்றின் குறுக்கே ஏரி மதகு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது இங்கு தண்ணீரை சேமித்து, அருகில் உள்ள ஏரிகளுக்கும், குளங்களுக்கும் திருப்பிவிடுவது வழக்கம். இந்நிலையில், ஏரி மதகு அமைந்துள்ள பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பராமரிப்பது, புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது போன்ற எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மேலும், தண்ணீரை தடுத்து நிறுத்தி வைக்க ஏரி மதகு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு ராடுகளை சமூக விரோதிகள் திருடிச்சென்றுள்ளனர்.

இதனால், ஆற்றில் வெள்ளம் வந்தாலும், குப்பநத்தம் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டாலும் அங்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரி மதகை சீரமைத்து தண்ணீரை சேமித்து வைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திருவண்ணாமலை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் நேற்று ஏரி மதகு பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் கூறுகையில், `ஏரி மதகு பகுதியில் பொருத்துவதற்காக புதிய இரும்பு ராடுகள் தருவிக்கப்பட உள்ளது. அவை வந்ததும் உடனடியாக பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Chengam , Action to rehabilitate the lake in the Chengam area: Information from the officer who inspected it
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணை