×

ஆமூர் ஏரியில் மண் அள்ளி செல்லும் லாரிகளை சிறைபிடித்து மறியல்

திருப்போரூர்:  திருப்போரூர் ஒன்றியம் ஆமூர் ஊராட்சி பெரிய ஏரியில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தினமும் நூற்றுக் கணக்கான லாரிகளில் மண் அள்ளப்படுகிறது.  மானாம்பதி ஊராட்சி கன்னிக்குளம், அகரம் வழியாக இந்த லாரிகள் செல்வதால் கிராம சாலைகள் சேதமாகிறது, பள்ளி செல்லும் குழந்தைகள் அச்சத்துடன் செல்வதாகவும் கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை . இந்நிலையில், நேற்று காலை கிராம மக்கள், கிராமங்கள் வழியாக செல்லும் லாரிகளை திருக்கழுக்குன்றம் - திருப்போரூர் சாலையில் மறித்து நிறுத்தி  மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து மானாம்பதி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் சமரசம் பேசி கலைய செய்தனர்.  இதையடுத்து பொதுமக்கள் மண் லாரிகள் செல்லும் அகரம் - கன்னிகுளம் சாலையில் மறியல் செய்தனர். இதையறிந்த திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலைச்செல்வி,  வருவாய்த்துறை அலுவலர்கள், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பொதுமக்களிடம் இருந்து வழங்கப்பட்ட மனுவை பெற்று கொண்ட வட்டாட்சியர் ராஜன், இதுதொடர்பாக கனிம வளத்துறையிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைகைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Lake Amur , Amur Lake, sand, lorry, captivity
× RELATED ஆமூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு...