ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 180 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: தந்தை, மகன் கைது

பொன்னேரி: பொன்னேரி அருகே 2 நாட்டு படகுகளில் ஆந்திராவுக்கு கடத்த தயார்நிலையில் இருந்த 180 மூட்டை ரேஷன் அரிசி, துவரம் பருப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பொன்னேரி அருகே பழவேற்காடு சுற்றுவட்டார பகுதியான சாத்தான்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து பழவேற்காடு ஏரி மூலம் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், தடா மண்டலம் அடுத்த பாலகிருஷ்ணாபுரம் கரூர் பகுதிக்கு 2 நாட்டு படகுகள் மூலம் 180 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் துவரம் பருப்பு கடத்தி செல்வதற்கு தயார்நிலையில் இருந்தது.

இதுகுறித்து, பழவேற்காட்டில் உள்ள கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் நேற்று காலை  கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு கடலோர காவல் படையினர் விரைந்து சென்றனர். அங்கு தயார் நிலையில் இருந்த 2 நாட்டு படகுகளை சோதனை செய்தனர். அதில் இருந்த 180 மூட்டை ரேஷன் அரிசி, துவரம் பருப்புகளையும் 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி, துவரம் பருப்பு மூட்டைகளை கடத்தி செல்ல முயன்ற ஆந்திர மாநிலம், கரூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி, அவரது மகன் ராஜ்குமார் ஆகிய இருவரையும் கடலோர காவல் படையினர் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர்.

Related Stories:

More
>