×

ராசிபுரம் அருகே சிக்னல் கிடைக்காமல் ஆலமரத்தில் ஏறி படித்த மாணவர்கள்!: ரூ.35 லட்சம் செலவில் செல்போன் டவர் அமைப்பு..!!

நாமக்கல்: ராசிபுரம் அருகே பல ஆண்டுகள் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் சன் நியூஸ் செய்தி எதிரொலியாக செல்போன் டவர் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பெரியகோம்பை, பெறப்பன் சோலை, புதூர் பாலபட்டி, புளியம்பட்டி, கல்லாங்குத்து உள்பட மலையடிவார கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செல்போன் டவர் இல்லாததால் சிக்னல் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் போராட்டங்கள் நடத்தியும் சம்பந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆலமரத்தின் மீது ஏறியும், உயரமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மீது அமர்ந்தும் ஆபத்தான முறையில் கல்வி பயின்று வரும் செய்திகளை சன் நியூஸ் ஒளிபரப்பியது. இதனை பார்த்து அதிர்ந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கின் தீவிர முயற்சியால் தனியார் செல்போன் நிறுவனம் புதிய டவர் அமைத்திருப்பது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சுற்றுவட்டார கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கும் சூழ்நிலையில் தற்போது செல்போன் டவர் அமைக்கப்பட்டிருப்பதால் தங்களின் கல்வி தடைபடாது என்று மாணவர்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இதற்கு காரணமான சன் நியூஸ், மாவட்ட ஆட்சியர் மற்றும் தனியார் செல்போன் நிறுவனத்திற்கும் பல்வேறு தரப்பினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.


Tags : Rasipura , Rasipuram, Signal, Alamaram, Cellphone Tower
× RELATED பூசாரியிடம் சாட்டையடி வாங்கிய பக்தர்கள்