இம்மாத இறுதிக்‍குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தவறினால் எஸ்.பி.ஐ. வங்கி கணக்கு முடக்கப்படும் என அறிவிப்பு

டெல்லி: இம்மாத இறுதிக்‍குள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காத எஸ்.பி.ஐ. வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க கடந்த ஜூன் மாதம் வரை அவகாசம் அளிக்‍கப்பட்டிருந்தது. பின்னர் 4 மாதங்களுக்‍கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி, இம்மாதம் 30ம் தேதிக்‍குள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்‍க வேண்டும் என்றும், இணைக்கத் தவறினால் அவர்களது பான் எண் செயலற்றதாகிவிடும் என்று எச்சரிக்‍கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ. வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வரும் 30ம் தேதிக்குள், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் எண் செயல்படாததாகிவிடும் என்றும் குறிப்பிட்ட சில பணப்பரிமாற்றங்களும் செய்ய முடியாமல் போகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆதார் - பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது.

குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது. இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. பல முறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த ஒன்றிய அரசு செப்டம்பர் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று உறுதியாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், இம்மாத இறுதிக்‍குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தவறினால் எஸ்.பி.ஐ. வங்கி கணக்கு முடக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories: