தொடர் சாரல் மழை: குற்றால அருவிகள் ஆர்ப்பரிப்பு

தென்காசி: குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. குளிக்க தடை காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அருவிகளை பார்வையிட்டு திரும்புகின்றனர். குற்றாலத்தில் சீசன் காலம் நிறைவடையும் தருவாயில் கடந்த சில நாட்களாக சாரல் நன்றாக பெய்து வருகிறது. பகலில் வெயில் இல்லை. வானம் எப்பொழுதும் மேகமூட்டமாக காணப்படுகிறது. அவ்வப்போது மேற்குத்தொடர்ச்சி மலையை கடந்து வரும் மேகக்கூட்டம் குற்றாலம், தென்காசி பகுதிகளில் மெல்லிய சாரல் மழையை பொழிந்தவாறு கடந்து செல்கிறது.

சில நாட்களாக பெய்து வரும் சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இந்த ஆண்டு சீசனில் சாரல் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாத காரணத்தாலும், நோய் தொற்று ஊரடங்கு காரணமாகவும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகைதந்து அருவியில் தண்ணீர் கொட்டும் அழகை ரசித்து செல்கின்றனர்.

அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்த போதும் குளிக்க முடியவில்லையே என்ற ஏமாற்றம், சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிகமாக உள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு விதிமுறைகளுடன் அருவிகளில் குளிக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Related Stories: