×

மோசடி மன்னன் சுகேஷ் வழக்கில் பிரபல நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை விசாரணை

புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான நிதி மோசடி வழக்கில், பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலினிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்தனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, இரட்டை இலை சின்னம் அதிமுக.வுக்கு கிடைக்க உதவுவதாக கூறி அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரனிடம் இருந்து சுகேஷ் சந்திரசேகர் 50 கோடி பேரம் பேசினார். இதற்கு முன்பணமாக 1.3 கோடியை பெறும்போது அவர் கையும் களவுமாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் போதும், மூத்த அரசு அதிகாரிகள் போல பேசி, பதவி உயர்வு, இடமாற்றம் பெற்று தருவதாக கூறி 200 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டான்.

பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிந்த அமலாக்கத்துறையினர் சுகேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சுகேஷூக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை கடந்த 24ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, சென்னையில் உள்ள சுகேஷின் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவில் இருந்து பல கோடி மதிப்புடைய 16 சொகுசு கார்கள், முக்கிய ஆவணங்கள், 82.5 லட்சம் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகையும் இலங்கையை சேர்ந்தவருமான ஜாக்குலின் பெர்னான்டசிடம் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது. அப்போது பண மோசடி சட்டத்தின்படி, அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``சுகேஷ் சந்திரசேகர் மீது 200 கோடி நிதி மோசடி வழக்கு பதிவாகி உள்ளது. அவன் தற்போது ரோகிணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்த வழக்கில் நடிகை ஜாக்குலினுக்கு தொடர்பு இருக்குமா? என்பது பற்றி அறிய அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது வாக்குமூலம் பதியப்பட்டது,’’ என்று தெரிவித்தார்.

Tags : Enforcement ,Jacqueline ,Sukesh , Sukesh, famous actress Jacqueline, enforcement, investigation
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...