×

மலைப்பகுதியில் சாரல் மழை: குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

தென்காசி: குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெய்து வரும் சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். சீசன் சமயத்தில் மெல்லிய சாரல் காணப்படும். இதமான காற்று வீசும். அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஆகஸ்ட் மாதத்துடன் சீசன் நிறைவடைந்து விடும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இறுதிகட்டத்தை எட்டி விட்ட நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று பகலிலும் அவ்வப்போது சாரல் பெய்தது. வெயில் இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதமான சூழல் நிலவியது.

தொடர் சாரல் காரணமாக நேற்று காலை முதல் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்த போதும் ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. தடையை மீறி சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



Tags : Kurla Falls , Heavy rains in the hills: Waterlogging in the Kurla Falls
× RELATED மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை...