×

பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; டேபிள் டென்னிசில் பவினா வெள்ளி பதக்கம் வென்றார்: பிரதமர் மோடி, ராகுல்காந்தி வாழ்த்து

டோக்கியோ: டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. டேபிள் டென்னிசில் பவினா, இறுதிபோட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையிடம் தோல்வி அடைந்த நிலையில் வெள்ளி பதக்கம் கிடைத்தது. அவருக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் வாழ்த்துதெரிவித்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பவினா படேல் வீல் சேரில் அமர்ந்த நிலையில், ரவுண்ட் 16 சுற்றில் பிரேசிலின் ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் விளையாடினார். 3-0 என வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். தொடர்ந்து கால் இறுதியில், செர்பியாவின் பெரிக் ரன்கோவிக்குடன் மோதினார். இதில் ஆதிக்கம் செலுத்திய பவினா 3-0 என எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். தொடர்ந்து நேற்று காலை நடந்த அரையிறுதி போட்டியில் சீனாவின் மியாவோ ஜாங்குடன் பவினா மோதினார்.

இதில் 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பவினா இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றார். இன்று காலை நடந்த இறுதி போட்டியில் சீனாவின் சீனாவின் யிங் ஜூவுடன் பவினா படேல் மோதினார். கடந்த 25ம் தேதி நடந்த முதல் லீக் ஆட்டத்தில் யிங் ஜூவிடம் தோல்வி அடைந்ததால் இன்று அதற்கு பவினா பழிதீர்த்து தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜூயிங்கிற்கு பவினாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 11-7 என எளிதாக யிங் ஜூ கைப்பற்றினார்.

அடுத்த 2 செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 11-5, 11-6 என கைப்பற்றினார். முடிவில் 3-0 என யிங் ஜூ வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றார். பவினா பட்டேலுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் இது தான். இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா 51வது இடத்தை பிடித்துள்ளது. வெள்ளி வென்ற பவினாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மோடி டுவிட்டரில், பவினா படேல் வரலாற்றை எழுதியுள்ளார். அவர் ஒரு வரலாற்று வெள்ளிப் பதக்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வருகிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். அவரின் வாழ்க்கை பயணம் ஊக்கம் அளிக்கிறது. இந்த வெற்றி இளைஞர்களை விளையாட்டுகளை நோக்கி ஈர்க்கும் என தெரிவித்துள்ளார்.



Tags : India ,Paralympics ,Pavina ,Modi ,Rahul Gandhi , India's first medal at the Paralympics; Pavina wins silver medal in table tennis: Congratulations to Prime Minister Modi, Rahul Gandhi
× RELATED 2028-ல் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன்: மாரியப்பன் உறுதி