சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ ருசிகர பேச்சு மேட்டூர் அணை மீன்களின் சுவை எப்படி இருக்கும்?

சென்னை: வேளாண்மை, கால்நடை, பால்வளம், மீன்வளம் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் மேட்டூர் உறுப்பினர் எஸ்.சதாசிவம்(பாமக) பேசியதாவது: தமிழகத்தில் சில சமயங்களில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை ₹30லிருந்து 200 ரூபாய் வரை உயர்கிறது. அவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ₹3,000 மானியமாக வழங்க வேண்டும். மேட்டூரில் செம்மமறி ஆடு ஆராய்ச்சி பண்ணை உள்ளது. இந்த செம்மறி ஆட்டின் இறைச்சி மிக, மிக ருசியானது.  மேட்டூர் அணையில் ஒரு போகத்துக்கு 45,000 மீன் குஞ்சுகள் விடப்படுகிறது. இதனை ஒரு கோடியாக உயர்த்த வேண்டும். மீன் குஞ்சுகளை சிறிதாக விடுகிறார்கள். அது 8 ெச.மீ. இருக்க  வேண்டும். இல்லாவிட்டால் குஞ்சு மீன்களை பெரிய மீன் சாப்பிட்டு விடுகிறது.  எனவே, 8 செ.மீ. மேல் மீன் குஞ்சுகளை விட வேண்டும். 2011 கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது, மேட்டூரில் மிகப்பெரிய மீன் கிடைத்தது.

உடனே கலைஞர், மேட்டூர் மீனை கொண்டு வாங்கள். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுங்கள் என்றார். அப்போது மேட்டூர் எம்எல்ஏவாக இருந்த ஜி.கே.மணி 1 டன் மீனை சமைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுத்தார். அப்படிப்பட்ட வரலாறு மேட்டூர் மீனுக்கு இருக்கிறது.

அவ்வளவு ருசியான மீன் அங்கு கிடைக்கிறது. சேலம் மாவட்டத்தை 2 ஆக பிரிக்க வேண்டும். எனது தொகுதியில், காவிரி ஆறு 33 கிலோ மீட்டரில் பயணிக்கிறது. மேட்டூர் மக்கள் அந்த தண்ணீரை பார்க்க தான் முடிகிறது. நாங்கள் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியவில்லை. 8 மாவட்டங்களுக்கு மேல் மேட்டூர் அணை பயன்படுகிறது. எனவே, சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதிக்காவது விவசாயத்துக்கு இந்த தண்ணீரை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  இதற்கு பதில் அளித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘மேட்டூர் அணையில் கூடுதல் மீன் குஞ்சுகளை விட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: