இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் வலுக்கட்டாயமாக இழுத்து போட்டு மாஜி ஐபிஎஸ் அதிகாரி கைது: உத்தரபிரதேச போலீசார் நடவடிக்கை

லக்னோ: உத்தரபிரதேசத்தில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த 24 வயதுடைய பெண், கடந்த 2019ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்பி அதுல் ராய் என்பவரால், தான் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாக புகார் அளித்தார். அதையடுத்து, அதுல் ராயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார வழக்கும், அந்த பெண் தனது வயது தொடர்பான தவறான ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தொடர்பாக அவருக்கு எதிரான வழக்கும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கடந்த 16ம் தேதி பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும், அவரது 27 வயது மதிக்கக்தக்க ஆண் நண்பரும் டெல்லி சென்று, உச்சநீதிமன்ற வளாகத்தின் வெளியே தங்களது உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் தீக்குளிப்பதற்கு முன்பு வெளியிட்ட பேஸ்புக் லைவ் வீடியோ பதிவில், ‘எம்பி அதுல் ராய் மற்றும் அவரது உறவினர்களுடன் போலீசார் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்’ என்று கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக போலீசார் விசாரணை நடத்தியதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தற்கொலைக்கு காரணமானவர்கள் பட்டியலில், கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்கூரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இவர், அந்த பெண் கூறிய போலீஸ் அதிகாரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ளது. அதனால், அமிதாப் தாக்கூரை அவரது வீட்டில் வைத்து தற்கொலைக்கு தூண்டிய புகாரில் லக்னோ போலீசார் கைது செய்தனர். முன்னதாக, லக்னோ குடியிருப்புக்கு வந்த போலீஸ் டீம், வீட்டில் இருந்த அமிதாப் தாக்கூரை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து ஜீப்பில் ஏற்றினர். ஆனால், அவர் ஜீப்பில் ஏற மறுத்தார். தொடர்ந்து, ‘என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான எப்ஐஆரை காட்டவில்லை என்றால், நான் ஜீப்பில் ஏறமாட்டேன்’ என்றார். இருந்தும், போலீசார் வலுக்கட்டாயமாக அமிதாப் தாக்கூரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு காவல் நிலையத்துக்கு சென்றனர். அங்கு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அமிதாப் தாக்கூரின் கைது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

இந்த வீடியோ பதிவை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் அமிதாப் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘வரும் பேரவை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக போட்டியிடுவேன்’ என்றார். இவ்வாறு அவர் பேட்டியளித்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

More
>