×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 3.74 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

*மீதமுள்ள 8.26 லட்சம் பேருக்கு செலுத்துவதில் தீவிரம்
*பொதுமக்கள் ஒத்துழைக்க அதிகாரிகள் வேண்டுகோள்

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8.26 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும், கட்டாயம் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை கழுவுதல் போன்ற தூய்மை நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தமிழக அரசின் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் விதமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறையினர், போலீசார் ஆகியோருக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர், 18 முதல் 45 வயது மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை 3 லட்சத்து 74 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 8.26 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை 3 லட்சத்து 74 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 8.26 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி குறித்து தேவையற்ற அச்சத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. எனவே, அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆற்காடு: ஆற்காடு அடுத்த புதுப்பாடி தனியார் நிறுவனம், கே.வேளூர், அனத்தாங்கல்,  கத்தியவாடி, நந்தியாலம், மாங்குப்பம் உள்ளிட்ட 7 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமில் 733 பேருக்கு மருத்துவக்குழுவினர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

Tags : Randkatta district , Ranipettai: Health officials have expressed concern that 8.26 lakh people in Ranipettai district have not been vaccinated.
× RELATED ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில்...