×

3 மாதத்திற்கான தண்ணீர் பங்கீட்டை பெற்று சாத்தனூர் அணையை திறக்க வேண்டும்-குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் முதல்போகத்திற்கான தண்ணீர் பங்கீட்டை பெற்று தென்பெண்ணை அற்றில், சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கவேண்டுமென விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக்கூட்டம் ஆட்சியர் மோகன் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசியதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்காலம் துவங்கிவிட்டது. தளவானூர் அணைக்கட்டுப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள ஏரிகளில் மதகுகள், கலிங்குகளை சரிசெய்யவேண்டும். மழைநீர் வீணாகி வெளியேறுவதை தடுக்கமுன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.

தொடர்ந்து ஆட்சியர் மோகன் பதிலளித்து பேசுகையில், தளவானூர்தென்பெண்ணை தடுப்பணை உடைந்ததை சீரமைக்க கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் சீரமைக்கப்படுவதற்கான ஆணைகள் ஓரிருநாட்களில் வந்துவிடும். அதன்பிறகு பணிகள் விரைந்து துவங்கப்படும்.மேலும், கடந்தமாத விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தனியார் ஆலைகள் ரூ.25 கோடி நிலுவை வைத்திருந்ததாக தெரிவித்தனர். அதில், ரூ.13.50 கோடி விவசாயிகளுக்கு பெற்றுத்தரப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.11.63 கோடி விரைவில் பெற்றுத்தரப்படும், ஏரிகளில் மதகுகளை சீரமைக்க பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில், தோட்டக்கலைத்துறையில், விவசாயிகள் தெரிவிக்கும் புகார்கள் தொடர்பாக ஆய்வு செய்ய அதிகாரிகள் கிராமங்களுக்கு நேரில் வருவது கிடையாது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறினர்.மேலும், சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர்திறக்கவேண்டும். முதல்போகத்திற்கு, நமக்கு மூன்று மாதத்திற்கு கொடுக்கவேண்டிய தண்ணீர்பங்கை பெற்றுத்தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும். பெயரளவில் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதிக்கொண்ட திருக்கோவிலூர் அணைக்கட்டு வரை மட்டுேம தண்ணீர் திறக்கின்றனர். நமக்கான பங்கீட்டினை முழுமையாக கேட்டு பெற வேண்டும்.

இதன் மூலம் ஏரி, குளங்கள் நிரம்பி, நிலத்தடிநீர்மட்டம் உயர்வது  மட்டுமின்றி, ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும். அதேபோல், திருக்கோவிலூரில் செயல்பட்டுவந்த பொதுப்பணித்துறை சப்டிவிஷன் அலுவலகம் விழுப்புரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் இந்த அலுவலகம் செயல்பட வேண்டும் என்றனர்.

இதற்கு, பதிலளித்த ஆட்சியர் மோகன், இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனைநடத்தி, நமக்கான தண்ணீர் பங்கீட்டினை பெற நடவடிக்கை எடுக்கப்படும். திருக்கோவிலூரில் பொதுப்பணித்துறை சப்டிவிஷன் அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில்,  நெல்கொள்முதல்நிலையங்களை அதிகரிக்கவேண்டும்.  பட்டாமாற்றம் செய்யும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

விவசாயத்திற்கு தனி பட்ஜெட் முதல்வருக்கு பாராட்டு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைகேட்புக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் மோகன், விவசாயிகளுக்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் சார்பிலும், மாவட்ட மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். தொடர்ந்து, விவசாயிகளும் பல ஆண்டுகால கோரிக்கையை ஏற்று தனிபட்ஜெட் தாக்கல் செய்த முதலமைச்சருக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.


Tags : Satanur Dam , Villupuram: In Villupuram district, water for first aid has been distributed from Tenpennai river to Sathanur dam.
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை...