×

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னையில் வெளிவட்ட சாலை அமைத்ததில் அரசுக்கு 1886.40 கோடி ரூபாய் இழப்பு: அமைச்சர் பகீர் தகவல்; திமுக- அதிமுக காரசார விவாதம்

சென்னை :  தமிழக சட்டப் பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் மானியக் கோரிக்ைக மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் (திமுக) பேசியதாவது:  நெடுஞ்சாலை பணிகள் ‘பேக்கேஜ்’ டெண்டர் முறையில் வழங்கப்பட்டுள்ளது. அந்த முறையை மாற்ற வேண்டும். பேக்கேஜ் எடுத்த ஒப்பந்ததாரர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சிற்றரசர் போல நடந்து கொள்கிறார்கள் என்று 2014ல் இப்போதைய அமைச்சர் பேசும் போது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை இ-டெண்டர் மூலம் ‘பேக்கேஜ்’ முறையில் கொடுப்பது ஒரு சிறப்பு திட்டமாக நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.

5 ஆண்டுகள் ஒப்பந்தம் எடுத்தவர்கள் சாலையை போட்டு பராமரிக்க வேண்டும். ஆனால், உறுப்பினர் இங்கே குற்றச்சாட்டாக சொல்கிறார். முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை. அதிமுக ஆட்சி மீது குற்றம் சுமத்துவதற்காக பேசுகிறீர்கள். அமைச்சர் எ.வ.வேலு:  பேக்கேஜ் முறையில் டெண்டர் எடுப்பவர்கள் மீண்டும் அந்த பணிகளை பலருக்கு பிரித்து வழங்குகிறார்கள். யார் பணிகளை மேற்கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை. போடப்படும் சாலைகளும் தரமில்லை. பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே தான் ‘பேக்கேஜ்’ டெண்டர் முறை ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையிலேயே கூறப்பட்டது.

எனவே இது தொடர்பான ஒரு அறிக்கையை படிக்கிறேன், ‘‘சாலை பணிகளை அரசு மேற்கொள்ளும் போதும், ‘பேக்கேஜ்’ முறையில் செய்யும் போதும் ஒரு கி.மீ. தூரத்திற்கு ரூ.50 ஆயிரம் வித்தியாசம் ஏற்படுகிறது. இந்த முறை டெண்டர் நடைமுறையால் சிறு ஒப்பந்ததாரர்கள் முதல் கொண்டு பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி: தகுதியானவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இ-டெண்டர் போடலாம். அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: 2001-06ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில் தான் ‘பேக்கேஜ்’ டெண்டர் முறை கொண்டுவரப்பட்டது. பிறகு, 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் அது நீக்கப்பட்டது. மீண்டும் 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது ‘பேக்கேஜ்’ டெண்டர் முறை கொண்டு வரப்பட்டது. இ-டெண்டர் முறையும் கலைஞர் உத்தரவின் பேரில் தான் கொண்டு வரப்பட்டது.  

 எடப்பாடி பழனிசாமி: இ-டெண்டர் முறை இப்போது தான் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு: டெண்டர் எடுக்க தகுதியான ஆள் அந்த மாவட்டத்தில் இருந்தாலும் அவர்களுக்கு பணி கிடைப்பதில்லை. அவர்களுக்கு பணி கிடைத்தால், சாலை பராமரிப்பு பணியை அக்கறையுடன் பார்த்துக் கொள்வார்கள். எடப்பாடி பழனிசாமி: டெண்டர் இப்படித் தான் போட வேண்டும் என்று எந்த சட்டமும், விதிமுறையும் இல்லை. அப்படி கொண்டு வர வேண்டும் என்றால் தனிச்சட்டம் தான் போட வேண்டும். மேலும் சென்னை எல்லை சாலையை பற்றி உறுப்பினர் குறிப்பிட்டார். இந்த சாலை 132 கி.மீ., தூரத்துக்கு அமைக்க வேண்டும். நில எடுப்பு பணி மிக முக்கியம்.

முதல்கட்டமாக நில எடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.  அமைச்சர் எ.வ.வேலு: ரூ.1000 கோடி அளவிலான பேக்கேஜ் முறைக்கு ஒப்பந்தம் போடும் அளவுக்கு இங்கு யாரும் வருவதில்லை. இங்குள்ளவர்கள் எடுக்கும் அளவுக்கு அந்த திட்ட மதிப்பீடு இருக்க வேண்டும். பெரிய தொகைக்கு டெண்டர் போடும் போது, இங்குள்ள சிறிய ஒப்பந்ததாரர்களால், அதில் பங்கேற்க முடியவில்லை. கூடுவாஞ்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான முதற்கட்ட வெளிவட்ட சாலை 2009-10ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் ரூ.1,081 கோடியில் தொடங்கப்பட்டது. பிறகு, அதிமுக ஆட்சி காலத்தில் 18-1-2011 அன்று 2வது கட்ட வெளிவட்ட சாலை ரூ.1,075 கோடியில் தொடங்கப்பட்டது.

இதில் அரசு 20 சதவீத பங்கு நிதியை வழங்கும், மீதி தொகையை குறிப்பிட்ட நிறுவனம் போட்டு பணிகளை முடிக்கும். பிறகு, அரசு சுங்கக் கட்டணம் மூலம் அந்த நிறுவனத்திற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை பணம் வழங்க வேண்டும். தற்போது, 2 பணிகளுமே முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், திமுக ஆட்சி காலத்தில் 6 மாதத்திற்கு ஒரு முறை ரூ.63.13 கோடி வழங்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.119.97 கோடி வழங்கப்பட்டது. இதனால், அரசுக்கு ரூ.1886.40 கோடி இழப்பு ஏற்பட்டது. இது தான் உங்கள் ஆட்சிக்கும், எங்கள் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்.  இவ்வாறு விவாதம் நடந்தது.

பேக்கேஜ் டெண்டர் நடைமுறையால் சிறு ஒப்பந்ததாரர்கள் முதல் கொண்டு பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Chennai ,Minister Bakir , AIADMK rule, government, loss, Minister Pakir, DMK-AIADMK
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...