×

கேத்தியில் கொட்டி தீர்த்த கனமழை

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று கேத்தி பகுதியில் மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நீலகிரியில் கடந்த மூன்று மாதமாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இம்மாதம் மழையின் தாக்கம் முற்றிலும் குறைந்து காணப்பட்ட போதிலும், கடந்த ஒரு வாரமாக மீண்டும் நீலகிரியில் இடியுடன்  கூடிய கன மழை பெய்து வருகிறது.

ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் கனமழை பெய்து வருகிறது. மற்ற பகுதிகளில் மழை குறைந்து காணப்பட்ட போதிலும், அவ்வப்போது கன மழை கொட்டி வருகிறது. அதேபோல், கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிளிலும் தினமும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை முதல் ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக, ஊட்டி அருகேயுள்ள கேத்தி சுற்று வட்டார பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் மழை நீடித்ததால், இப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. குறிப்பாக, கேத்தி பாலாடாவில் இருந்து எல்லநள்ளி செல்லும் சாலையில் உள்ள கரிப்பாலம் மழை நீரால் தண்ணீரில் மூழ்கியது.

இதேபோன்று கேத்தி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மேலும், ஊட்டியிலும் நேற்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் மழை நீடித்த நிலையில், சுற்றுலா பயணிகள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், தொடர் மழையின் காரணமாக தற்போது ஊட்டியில் குளிர் அதிகரித்துள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்புச்சுவர் இடிந்து சேதம்

ஊட்டியில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் மழை காரணமாக கோத்தகிரி சாலையில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஊட்டி மற்றும் ஊட்டி புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பகல் நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், தொடர் குளிர் நீடிக்கிறது. இந்த கனமழையால் புறநகர் பகுதிகளில் சிறு சிறு மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனிடையே, நேற்று முன்தினம் ஊட்டி நகரில் காலை துவங்கிய மழை மாலை வரை இடைவிடாமல் நீடித்தது. கனமழை காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழைக்கு ஊட்டி - கோத்தகிரி சாலையில் மேல்கோடப்பமந்து பகுதியில் சாலையோர குடியிருப்பை ஒட்டியுள்ள தடுப்புச்சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்கும் பணிகளை துவக்கி உள்ளனர்.

Tags : Kathy , Ooty: Heavy rains lashed the Nilgiris district for the last three days.
× RELATED நாம் அனைவரும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின்...