×

மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் இருந்து ஏரியில் விடப்படும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: ஒன்றிய ஆணையாளரிடம் பொதுமக்கள் புகார்

திருப்போரூர்: மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் இருந்து ஏரியில் விடப்படும் கழிவுநீரால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதுதொடர்பாக, ஒன்றிய ஆணையாளரிடம் மனு அளித்தனர். திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் ஊராட்சி பெரியார் நகர், ஊத்துக்குழி ஆகிய குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் வெங்கட்ராகவனிடம், நேற்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் ஊராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காவல்துறையினருக்கு சொந்த வீடு குடியிருப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என 3500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் திறந்தவெளி கால்வாய் மூலம் அருகில் உள்ள ஏரியில் விடப்படுகிறது. இதனால், ஏரி முழுவதும் ரசாயன நுரையாக மிதக்கிறது. மேலும், அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது.   இதுகுறித்து காவலர் குடியிருப்பு நிர்வாகிகளிடம் பலமுறை எடுத்துக்கூறியும், இந்த செயல் தொடர்ந்து நடைபெறுகிறது. அதேபோல் வண்டலூர் சாலையில் இயங்கும் 2 தோல் தொழிற்சாலைகளில் இருந்து தோலை பதப்படுத்தி வெளியேற்றப்படும் கழிவுநீர், சுத்தகரிக்கப்படாமல் வெளியே விடப்படுகிறது. இதுபோல் விடப்படும் கழிவுநீர் பொதுப்பணித்துறை ஏரியில் கலக்கிறது.

ஏற்கனவே, விவசாயம் முழுவதும் நலிவடைந்து விட்ட நிலையில், இந்த ஏரிகளில் கிணறுகள் தோண்டப்பட்டு அங்கிருந்து குடிநீர் பொதுமக்களுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த குடிநீரை பருகும் பொது மக்களுக்கு தோல் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, ஒன்றிய நிர்வாகம் இந்த சட்டவிரோத தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று காவலர் குடியிருப்பில் இருந்து ஏரியில் விடப்படும் கழிவுநீரை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ெபாதுமக்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர் வெங்கட்ராகவன், இக்கோரிக்கை குறித்து காவலர் குடியிருப்பு நிர்வாகத்துக்கு 2 முறை அறிவிப்பு அனுப்பியதாகவும், இருப்பினும் கலெக்டருக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். மேலும், வரும் 28ம் தேதி (நாளை) சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்.


Tags : Melakkottaiyur police station ,Commissioner , Guard residence, lake, sewer, sanitary disorder
× RELATED வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து...