மைசூரு சாமுண்டி மலைப்பகுதியில் வடமாநில மாணவி கூட்டு பலாத்காரம்: 5 பேர் கும்பல் பயங்கரம்

மைசூரு: மைசூரு சாமுண்டி மலைப்பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணை 5 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் இளம்கலை பட்டம் படித்து வந்த 19 வயது இளம் பெண், நேற்று முன்தினம் தனது நண்பருடன் சாமுண்டேஸ்வரி மலைப்பகுதிக்கு சென்றார். இயற்கை காட்சிகளை சுற்றிப்பார்த்த இருவரும் மாலையில் பைக்கில் வீட்டிற்கு திரும்புவதற்காக மலைப்பகுதியில் இறங்கி வந்து கொண்டிருந்தனர். தப்பிலினள்ளி  பகுதியில் வந்தபோது குடிபோதையில் அந்த வழியாக எதிரே வந்த 5 பேர் கும்பல், அவர்களை வழிமறித்து தாக்கியது. வாலிபரை அந்த கும்பல் கல்லால் தாக்கியதில் மயங்கி விழுந்தார்.

பின்னர், அந்த கும்பல் மாணவியை மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தது. இதில், அப்பெண் மயக்கம் அடைந்தார். நள்ளிரவு அந்த வழியாக சென்றவர்கள் வாலிபர் மயங்கி கிடந்ததை பார்த்து மீட்டனர். பின்னர்தான், கூட்டு பலாத்காரம் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனே, இது குறித்து ஆவனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் செல்வதற்குள், அப்பகுதியில் இருந்தவர்கள் இளம் பெண் மற்றும் வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.  

இது குறித்து நகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா கூறுகையில், ‘‘5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. மர்ம நபர்கள் வந்து சென்ற பாதைகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து  வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். மருத்துவமனையில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்து இல்லை, குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.  இந்த சம்பவத்துக்கு கர்நாடகா எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories: