திருவள்ளூர் ஜி.ஹெச். கட்டுமான பணி: அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூரில் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்தாண்டு ரூ.385.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.165.63 கோடியில் புதிய நவீன வசதியுடன் கட்டிடங்கள் கட்டும் பணியும், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.220 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன ஆய்வு கூடம், கலையரங்க வளாகம், மாணவர்கள் தங்கும் விடுதி ஆகியவைகளுக்கான கட்டுமான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது.

இந்த கட்டுமான பணிகளின் தரம் குறித்து பொதுப்பணி துறை கண்காணிப்பு பொறியாளர் ஆயத்தரசு ராஜசேகர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் தரைதளம், ஆய்வு கூடம், மேல்தளத்தில் கட்டுமானத்தின் உறுதிதன்மை ஆகியவற்றை ஆய்வு செய்தார். அதேபோல், திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் புதிய கட்டுமான பணிகளையும் ஒவ்வொரு பகுதியாக பார்வையிட்டார். அப்போது, நீண்ட நாள் பயன்பாட்டிற்கான கட்டிடம் என்பதாலும், களிமண் தரையில் அமைவதால் அதற்கான அடித்தளம் உறுதி தன்மையோடும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது பொதுப்பணி துறையின் மருத்துவ பிரிவு செயற்பொறியாளர் முத்தமிழரசன், உதவி செயற்பொறியாளர் புஷ்பலிங்கம் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>