×

வேலூர் அருகே உள்ள அமிர்தி வனச்சரணாலயம் திறப்பு: முகக்கவசத்துடன் வந்தால் மட்டும் அனுமதி

வேலூர்: வேலூர் அருகே உள்ள அமிர்தி வனச்சரணாலயம் 4 மாதங்களுக்கு பிறகு இன்று காலை திறக்கப்பட்டது. முக கவசம் அணிந்து வரும் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுற்றுலா தலங்களுக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கடந்த 21ம்தேதி தமிழக அரசு ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை அறிவித்தது.

அதில் சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறந்து கொரோனா விதிமுறைகளுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று அறிவித்தது.
இதையடுத்து சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் நோய் தொற்று அபாயமின்றி வந்து செல்வதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து சென்னை அருகே உள்ள வண்டலூர் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வனச்சரணாலயங்கள் பார்வையாளர்களுக்கு திறக்க வனத்துறை இயக்குனரகம் அனுமதி வழங்கியது.

அதேபோல் வேலூர் அருகே உள்ள அமிர்தி வனச்சரணாலயத்திலும் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. விலங்குகளின் கூண்டுகள், அதை சுற்றியுள்ள கைப்பிடிகள், சுற்றி வரும் பாதைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதேபோல் விலங்குகள் கூண்டுகளிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து மண்டல வனப்பாதுகாவலர் சுஜாதா உத்தரவின்பேரில், மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார் அறிவுறுத்தலின்படி, இன்று காலை 9 மணியளவில் அமிர்தி வனச்சரணாலயம் பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்பட்டது.

இதுதொடர்பாக அமிர்தி வனச்சரணாலய துணை இயக்குனர் முரளிதரன் கூறும்போது, ‘அமிர்தி வனச்சரணாலயத்திற்கு வரும் பார்வையாளர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும். அதேபோல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கைகளை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும் என்பது உள்பட கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Amirthi Wildlife Sanctuary ,Vellore , Opening of Amirthi Wildlife Sanctuary near Vellore: Permission only if you come with a mask
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...