×

ஒரு ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் அவர்களைத் தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும்: விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு ஆசிரியர் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றாலும் அப்பள்ளியைத் திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், அந்த ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, வரும் 1ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் சுழற்சி முறையில் வரவழைக்கப்படவுள்ளனர். இதனிடையே, பள்ளிகளை திறக்கும் முன்பே தகுந்த நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மாவட்டக் கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் நேற்று மாலை ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், அனைத்து வகை உயர்நிலை- மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதி அன்று பள்ளிகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கு மாணவர்கள் வருகை புரியும்போது அனைத்து ஆசிரியர்களும் கோவிட்-19 தடுப்பூசி போடுவது அவசியம்.

ஏதேனும் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அப்பள்ளி திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், அவ்வாசிரியர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகவே, இதில் கவனம் செலுத்தி ஏதேனும் ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் அவர்களைத் தடுப்பூசி போட அறிவுறுத்த அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டார். மேலும், எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை பேசும் பொருளாக மாறியது. ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை எனில் அவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பள்ளி திறக்கப்படாது என்பதை எவ்வாறு ஏற்க முடியும் எனக் கல்வியாளர்களிடையே கேள்வி எழுந்தது. அதையடுத்து, மீண்டும், இன்று இச்சுற்றறிக்கையில் மாற்றம் செய்து மீண்டும் அனுப்பப்பட்டது. அதில், ஏதேனும் ஓர் ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் அவர்களைத் தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும். மேலும் உடல்நலக் குறைவு, அறுவை சிகிச்சை அல்லது வேறு உடல் சார்ந்த பிரச்சினைகள் இருப்பவர்கள், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றபின் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Wirdunagar , If a teacher has not been vaccinated, they should be instructed to be vaccinated: Virudhunagar District Primary Education Officer Circular
× RELATED விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை...