×

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்காக 1983ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பின் படி 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தல் நோக்கத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓபிசி பிரிவில் உள்ளவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள மற்றவர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது. சீர் மரபினரின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது. எனவே 10.5 சதவீதம் வழங்கிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதுதொடர்பாக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது முக்கிய விசாரணையாக இன்று நடைபெற்றது. அரசு தலைமை வழக்கறிஞர் ராஜராஜீ இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க கூடாது, ஏற்கனவே சட்டப்பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் பணியிடங்கள் நிரப்பும் போது இந்த இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது.

இதனால் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் மற்றவர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே இடைக்கால உத்தரவு தேவையில்லை என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதர பிற்படுத்தப்பட்ட வழக்கில் சேர்க்கப்பட்ட ஜாதிகளை அடையாளம் காண்பதும் பிற்படுத்தப்பட்ட நல ஆணைய தலைவரின் பரிந்துரைகள் தன்னிச்சையான பரிந்துரையாக இருக்கிறது. மற்றவர்கள் யாருடனும் கலந்தாலோசிக்காமல் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று பரிந்துரைத்தது தவறு என்றும் வன்னியர்களுக்கு ஏற்கனவே இட ஒதுக்கீடு உள்ள நிலையில் கல்வியில் தனி இட ஒதுக்கீடு என்பது தேவையற்றது. எனவே தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காலத்தால் எந்தவிதமான பணி நியமனங்களும், மாணவர் சேர்க்கையும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகின்ற நிலையில் அரசு பணி நியமனங்களும், மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதற்கு தடை விதிக்கவிட்டால் உள் ஒதுக்கீடு பெற முடியாதவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று வலியுறுத்தப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இதில் இடைக்கால தடை என்ற நேரடியான உத்தரவை பிறப்பிக்கவில்லை. அதேநேரம் மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்கள் தொடர்பாக பின்பற்றப்படும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Vanni ,Chennai High Court , Reservation
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...