×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைபடி பள்ளிகள் திறப்பு-அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி, பள்ளிகளை திறக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். தமிழகத்தில் வருகிற 1ம் தேதி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, ஆலோசனை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளர்கள், உள்ளாட்சி துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகம், வகுப்பறைகள், தளவாட பொருட்களை தூய்மைப்படுத்தி, கிருமிநாசினி தெளிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் கழிவறைகளை சுத்தப்பத்திட வேண்டும். நலப்பணிகள் இணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஆகியோர் பள்ளிகளுக்கு தேவையான கிருமி நாசினியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாணவர்களுக்கு சீரான இடைவெளியில் உடற்பரிசோனை செய்தல், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொண்டதை உறுதி செய்திட வேண்டும். பொதுப்பணித்துறை அலுவலர்கள் பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள், வகுப்பறைகயில் உள்ள மின்சாதன பொருட்களை பழுது நீக்கி மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தனியார் பள்ளி பஸ்கள் பாதுகாப்பாக இயக்க கூடிய நிலையில் உள்ளதா என்பதை கண்காணித்தும், பள்ளி பஸ்களில் சிசி டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்றும், தனியார் பள்ளி பஸ்களில் சமூக இடைவெளியை பின்பற்றி இயக்குவதற்கு உரிய சான்று வழங்கியும், அரசு பேருந்து உரிய நேரத்திற்கு இயக்கத்தக்க வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், போக்குவரத்துறை அலுவலர்கள் மாணவர்கள் பள்ளி சீருடையில் செல்லும் போது, அரசு பள்ளிகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். உரிய பள்ளி நேரத்திற்கு ஏற்றவாறு பஸ்களை இயக்கிட வேண்டும். மின்வாரிய துறை அலுவலர்கள் பள்ளி வளாகத்தில் பழுதடைந்த மின் கம்பங்களை சீர்படுத்தியும், மின்சார பழுதுகளை சரிசெய்தும், மின் கம்பங்கள் பாதுகாப்பு முறையில் உள்ளதா என உறுதிப்படுத்திட வேண்டும். சத்துணவு துறை அலுவலர்கள், மாணவர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் சத்துணவு வழங்க உரிய ஏற்பாடு செய்திட வேண்டும். தமிழக அரசின் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். பரமசிவன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Krishnakiri District , Krishnagiri: The Collector said that schools should be opened in Krishnagiri district as per the government guidelines. In TamilNadu
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே...