பஞ்சாப் காங்கிரசில் உட்கட்சி மோதல் முதல்வர் அமரீந்தருக்கு எதிராக நான்கு அமைச்சர்கள் போர்க்கொடி: மேலிட தலைவர்களை சந்தித்து பேச திட்டம்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் அமிர்ந்தர் சிங்குக்கு எதிராக 4 அமைச்சர்கள் மற்றும் 32 எம்எல்ஏகள் போர்க்கொடி தூக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி தயாராகும் வகையில், முன்னாள் அமைச்சர் சித்து மற்றும் முதல்வர் அமரீந்தர் சிங் இடையே ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சித்துவுக்கு மாநில தலைவர் பதவியை கொடுத்து கட்சி மேலிடம் முற்றுப்புள்ளி வைத்தது.

இந்நிலையில், நேற்று 4 அமைச்சர்கள் மற்றும் 32 எம்எல்ஏக்கள் ஒன்று கூடி, மத நூலை அவமதிக்கும் வழக்குகளில் நீதி தாமதம், போதைப்பொருள் கடத்தலில்  ஈடுபட்டுள்ள முக்கிய பிரமுகர்களை பிடித்தல் மற்றும் மின் கொள்முதல்  ஒப்பந்தங்களை ரத்து செய்வது உட்பட கடந்த 2017ம் ஆண்டு தலைமை கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என முதல்வர் அமரீந்தருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதுகுறித்து அமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், ‘‘கட்சி தலைமை கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் அமரீந்தர் அரசு நிறைவேற்றவில்லை. இந்த பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று நாங்கள் இனி நம்பவில்லை. உயர் மட்ட தலைவர்கள் சந்தித்து முறையிட நேரம் கேட்டுள்ளோம்’’ என்றார். 

Related Stories:

More
>