செங்கல்பட்டு ஜி.ஹெச்.சில் தூங்குவதற்கான இட வசதி: நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை

செங்கல்பட்டுசெங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண், இதயம், நரம்பியல், எலும்பு முறிவு, பொதுநல பிரிவு, விபத்து மற்றும்  அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். அந்த வகையில் 5 ஆயிரம் பேர் வெளி நோயாளிகளாகவும், 3 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, இங்கு தாய்சேய் நல சிகிச்சை பிரிவில் பிரசவத்திற்காக வரும் பெண்கள் அதிகம் என்பதால் அவர்களுடன் பெற்றோர்கள், உறவினர்கள் வருகின்றனர். இவர்கள், தாய் சேய் நல கட்டிடம் முன்பு இரவு நேரத்தில் தங்குவதற்கு இடமில்லாமல் சிகிச்சை பிரிவு வளாகத்திலேயே தூங்குகின்றனர்.

இவர்கள், கொசு கடியிலும், விஷ பூச்சிகளின் அச்சத்திலும் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கர்ப்பிணிகளை பார்க்க உறவினர்களும் வருவதால், சில நேரங்களில் அவர்களும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கும் நிலை உள்ளது. போதுமான இட வசதி இல்லாததால் அருகருகே படுத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கர்ப்பிணிகளை பார்க்க வரும்போது, சில நேரங்களில் இரவு பஸ் வசதி இல்லாமல் போய்விடுகிறது. இதனால் வேறு வழியின்றி மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வேண்டியுள்ளது. ஆனால் இங்கு தூங்குவதற்கு போதுமான வசதி இல்லை. அதனால் தனி அறை ஒதுக்கி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். எங்களது நிலையை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>