×

புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு: கடைகளை அடைத்து நகை வியாபாரிகள் போராட்டம்

காஞ்சிபுரம்: மத்திய அரசின் புதிய விதிகளான ஹால்மார்க் அடையாள எண் பெறுவது குறித்த விதிகளை கைவிடக்கோரி காஞ்சிபுரம் தங்க நகை வியாபாரிகள் மற்றும் அடகு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கடந்த ஓராண்டாக தங்க நகை வியாபாரிகள் அனைவரும் ஹால்மார்க் முத்திரை பெற்று தங்க நகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என புதிய ஹால்மார்க் விதிகளை அமல்படுத்தியுள்ளது.ஆனால், தங்க நகைகளுக்கு அடையாள எண் பதிவிட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தங்கநகைகள் அடையாள எண் பதிவிட போதிய வசதிகள் இல்லை என தங்க நகை வியாபாரிகள் மற்றும் அடகு வியாபாரிகள் கூறி வந்தனர். மேலும், மத்திய அரசின் விதிகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், மத்திய அரசின் விதிகளை கண்டித்து, தங்க நகை வியாபாரிகள் மற்றும் அடகு வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, காஞ்சிபுரம் தங்க நகை வியாபாரிகள் மற்றும் அடகு கடை வியாபாரிகள் சங்க தலைவர் மோகன்லால், செயலாளர் குப்தா தலைமையில் மத்திய அரசின் புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடைகளை அடைத்து பதாகைகளை கையில் ஏந்தி கடை முன் நின்று மௌன போராட்டம் நடத்தினர். இதனால், ஜவகர்லால் தெரு, செங்கழுநீர் ஓடை வீதி, சேக்குப்பேட்டை நடுத்தெரு, காமராஜர் வீதி உள்ளிட்ட பல இடங்களிலும் சிறு நகை வியாபாரிகள் முதல் பெரிய நகைக் கடை வியாபாரிகள், கடைகளை அடைத்தனர்.

Tags : Hallmark , New Hallmark, protest, merchants, struggle
× RELATED ஹால்மார்க் தங்க நகை விழிப்புணர்வு நிகழ்ச்சி