அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்டு ரூ.3 கோடி கொடுத்து மீட்ட சம்பவம்: காங்கேயம் அருகே பரபரப்பு

காங்கேயம்: காங்கேயம் அருகே பிரபல அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்டு ரூ.3 கோடி கொடுத்து மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கேயம் அருகே கவுண்டம்பாளையத்தைச்  சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் பெரிய அரிசி ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். தொழிலதிபரான இவரது மகன் சிவபிரதீப்(25), அரிசி ஆலை நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரை அரிசி ஆலை அருகே கடத்திய ஒரு கும்பல், அவரது பெற்றோரிடமிருந்து ரூபாய் 3 கோடி பணத்தை கேட்டு மிரட்டியது.

இதனையடுத்து அவரது பெற்றோர்  காவல்துறைக்கு செல்லாமல் கடத்தல் கும்பலுக்கு 3 கோடி ரூபாய் கொடுத்து மதுரை அருகே மகனை மீட்டனர். பின்னர் மகனை பத்திரமாக மீட்ட நிலையில், காவல்துறையிடம்  தந்தை ஈஸ்வரமூர்த்தி புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், டிஎஸ்பி குமரேசன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: