×

தமிழகம் முழுவதும் வனத்துறையில் அதிரடி மாற்றம் களக்காடு புலிகள் காப்பகத்தோடு நெல்லை வன மண்டலம் இணைப்பு

நெல்லை: நெல்லை வன மண்டலம் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்தோடு தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதன் எல்கையானது ராமநாதபுரம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. தமிழக வனத்துறையில் இரு தினங்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட வன அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். அதிகாரிகளை மாற்றம் செய்த கையோடு, வனமண்டலங்களின் எல்கைகளை விஸ்தரித்தும், இணைத்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் வனத்துறையின் நெல்லை மண்டலம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மண்டலத்தில் தற்போது நெல்லை கோட்டம், தூத்துக்குடி கோட்டம், கன்னியாகுமரி கோட்டம், சமூகவனக்காடுகள் கோட்டம் ஆகியவை உள்ளன. இதில் தற்போது ராமநாதபுரம் கோட்டமும் இணைக்கப்பட்டு, இவை அனைத்தும் இனிமேல் ‘களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக மண்டலம்’ என்ற ஒரே பெயரில் இயங்க உள்ளது. ராமநாதபுரம் கோட்டம் இணைப்பில் சிறு குழப்பமும் நீடிக்கிறது. ராமநாதபுரம் கோட்டம் இணைக்கப்பட்டுள்ளதா அல்லது ராமநாதபுரம் தொடங்கி, தூத்துக்குடி வரையிலான மன்னார்வளைகுடா உயிர்கோள காப்பகம் இம்மண்டலத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வனத்துறை ஊழியர்கள் தெளிவற்ற நிலையில் உள்ளனர்.

இதேபோல் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களின் வன எல்கைகளை ஒருங்கிணைந்து ‘வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்’ என்ற பெயரில் இயங்கிடவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வன மண்டலங்களுக்கும், புலிகள் காப்பகத்திற்கும் தலைமை பொறுப்பில் இருந்த தனித்தனி அதிகாரிகள் மாற்றப்பட்டு, ஒரே அதிகாரியின் கீழ் புலிகள் காப்பகம் இயங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை மண்டல வன பாதுகாவலர் செந்தில்குமார், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநராக பணியாற்றிய யோகேஷ் சிங் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Nella ,Action Change Field Tigers ,Tamil Nadu , Tamil Nadu, Forest Department, Kalakkadu Tiger, Zone
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது