×

திருவாரூரில் 5 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த அரிசி ஆலை மீண்டும் இயக்கம்: முதல்வருக்கு தொழிலாளர்கள் பாராட்டு

திருவாரூர்: திருவாரூரில் அதிமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டு காலத்திற்கு மேலாக இயங்காமல் இருந்து வந்த நவீன அரிசி ஆலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவினை ஏற்று திறக்கப்பட்டதால் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். திருவாரூர் ரயில் நிலையம் எதிரே நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான எம்.ஆர்.எம் எனப்படும் நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. கடந்த 1965ம் ஆண்டில் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் மூலம் துவங்கப்பட்டு தஞ்சை கூட்டுறவு விற்பனை இணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த இந்த நவீன அரிசி ஆலை 1972ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டு பின்னர் அரசுடமையாக்கப்பட்டது. இதுபோன்ற நவீன அரிசி ஆலைகளில் அரைக்கப்படும் நெல்லிலிருந்து கிடைக்கும் உமியினை கொண்டு தான் மாநிலம் முழுவதும் நவீன அரிசி ஆலைகள் இயங்கி வரும் நிலையில் இதன் மூலம் ஏற்படும் கறித்தூள் பொது மக்களின் கண்களை பாதித்து வந்ததால் கடந்த 2000ம் ஆண்டில் இந்த நவீன அரிசி ஆலை இயற்கை எரிவாயு மூலம் இயங்குவதற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார்.

இதனையடுத்து மாநிலத்தில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் ஒரே ஆலை என்ற சிறப்பினை இந்த நவீன அரிசி ஆலை பெற்றுள்ளது.
மேலும் இந்த ஆலையில் சைலோ எனப்படும் நெல் சேமிப்பு தொட்டியானது ஆயிரம் டன் அளவு கொண்ட 6 தொட்டிகளும், 200 டன் அளவு கொண்ட 6 தொட்டிகளும் என 12 தொட்டிகள் இருந்து வருகின்றன. மேலும் நாளொன்றுக்கு 100 டன் அளவில் அரிசி அரைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நவீன அரிசி ஆலையினை பராமரிப்பு பணி என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. இது குறித்து தொடர்ந்து தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் கலெக்டர் முதல் அமைச்சர் வரையில் ஆலையை விரைவில் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 7ம் தேதி திருவாரூர் வருகை தந்த முதல்வர் மு.க ஸ்டாலினிடம் இது குறித்து தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆலையினை விரைந்து திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதனையடுத்து ஒன்றரை மாத காலத்திற்குள் ஆலை இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நேற்று முன்தினம் நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் இந்த நவீன அரிசி ஆலையில் இருந்து வரும் நெல் சேமிப்பு தொட்டியில் நெல் கொட்டும் பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் தியாகராஜன், உதவி பொறியாளர் பால பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து அந்த ஆலையில் பணியாற்றி வரும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பக்கிரிசாமி கூறுகையில் எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்த முதல்வருக்கு தொழிலாளர்கள் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

Tags : Thiruvarur , In Thiruvarur, 5 year, idle, rice mill
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்