×

மாங்காடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.44 கோடி மதிப்பிலான திமிங்கல கழிவுகள் பறிமுதல்: 4 பேர் அதிரடி கைது

சென்னை: கடல்வாழ் உயிரினங்களில் பெரிய வகையான திமிங்கலம், தனது உணவாக பல்வேறு வகை மீன்களை சாப்பிடுகிறது. கடினமான ஓடுகளைக் கொண்ட கனவாய் மீன்களை சாப்பிடும்போது அது செரிப்பதற்காக திமிங்கலத்தின் உடலில் ஒரு வகை மெழுகு போன்ற பொருள் சுரக்கிறது. திமிங்கலத்தின் உணவு செரிமானம் ஆனதும் இந்த மெழுகு போன்ற பொருள் கழிவாக வெளியேறி, கடலில் ஆங்காங்கே மிதக்கிறது. இது, திமிங்கல வாந்தி (அம்பர்கிரிஸ்- Ambergris)  என்றும் அழைக்கப்படுகிறது. திமிங்கில வாந்தி எனும் அம்பர்கிரிஸ் கருப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் எண்ணெய் நிறைந்த பொருள் ஆகும்.

இது நீள்வட்ட அல்லது வட்ட வடிவத்தில் காணப்படும். கடல்நீரில் தொடர்ந்து பயணம் செய்வதால் அத்தகைய வடிவம் ஏற்படுகிறது. இதை கொண்டு வாசனை திரவியங்கள், ஆபரணங்கள், ஆண்மை குறைவுக்கு மருந்து உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை சேகரிக்கவும், பாதுகாத்து வைக்கவும் மத்திய அரசு தடை செய்துள்ளது. தற்போது அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல வாந்தி கள்ளச்சந்தையில் ஒரு கிலோ, ஒரு கோடி முதல் ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இதை விற்பனை செயபவர்களை வனத்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

 இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாங்காடு பகுதியில் அம்பர்கிரிஸ்  எனப்படும் திமிங்கல வாந்தி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீபெரும்புதூர் கோட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை சரகர் ராஜ்குமார் தலைமையில் பணியாளர்கள் நேற்று மாங்காடு பகுதியில் சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் அம்பர்கிரிஸ்  பதுக்கிவைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டிலிருந்து சுமார் 22 கிலோ அம்பர்கிரிஸ்  பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் மதுரை, காலாங்கரை பகுதியை சேர்ந்த முருகன் (53), சென்னை, வடபழனி, அழகிரி நகர் பகுதியை சேர்ந்த விஜயபாஸ்கர் (56), மதுரவாயல், அடையாளம்பட்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (33), அரும்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் (36) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 22 கிலோ அம்பர்கிரிஸ்  பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags : Mankadu , Whale waste, seizure, arrest
× RELATED பாலியல் தொல்லையால் மாங்காடு பள்ளி...