×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 14 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்

சென்னை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வெயில் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் அதிகபட்சமாக 50 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதாலும், தமிழகத்தில் வெப்ப சலனம் நீடித்து வருவதாலும் மழை பெய்வதற்கான  வாய்ப்பு உருவாகியுள்ளது. அதன்படி, கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

Tags : Atmospheric overlay circulation, thunder, rain
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...