×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் சிவசங்கர் பாபா மீதான 2, 3வது வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி தீவிரம்: 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் போலீசார் தகவல்

சென்னை:  சென்னை அடுத்த கேளம்பாக்கம் சுசில் ஹரி  பள்ளி மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பள்ளியின் நிறுவனரான  சிவசங்கர் பாபா, கடந்த ஜூன் 16ம் தேதி சிபிசிஐடி போலீசார் போக்சோ  சட்டத்தில் கைது செய்தனர்.அவருக்கு உடந்தையாக இருந்ததாக நடன ஆசிரியை  சுஷ்மிதாவையும் ஜூன் 18ம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில்  அடைத்தனர். இதையடுத்து அவரது ரகசிய அறையில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையில்  மேலும் 2 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.

மேலும் அவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கில், 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை  சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி கடந்த 13ம் தேதி  சிவசங்கர் பாபா மீது பதியப்பட்டுள்ள முதல் போக்சோ  வழக்கிற்கான குற்ற பத்திரிகையை சிபிசிஐடி போலீசார், செங்கல்பட்டு போக்சோ  நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், 40 சாட்சியங்களின்  அடிப்படையில் 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்யப்பட்டது. அதில் சிவசங்கர் பாபா,  ஆசிரியரான பாரதி, நடன ஆசிரியர்  சுஷ்மிதா, தீபா ஆகியோர் அடங்குவர்.

இந்நிலையில் 2வது போக்சோ வழக்கின்  குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி முடிந்துள்ள நிலையில் 3வது போக்சோ வழக்கின்  மீதான குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து  வருகிறது.  இந்த குற்ற பத்திரிகைகள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்னும் 10 நாட்களில்   தாக்கல் செய்யப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வலுவான  ஆதாரங்கள் இருப்பதால் சிவசங்கர் பாபாவும் அவருக்கு உடந்தையாக  இருந்தவர்களும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Tags : Shiva Sangar Baba , Sexual harassment, Sivashankar Baba, chargesheet, court, police
× RELATED பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை...