சின்சினாட்டி: வெஸ்டர்ன் அண்டு சதர்ன் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் விளையாட மகளிர் பிரிவில் ஜில் டெய்க்மண், ஆடவர் பிரிவில் டானில் மெத்வதேவ் ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜில் டெக்ய்மண்(76வது ரேங்க்), ஜப்பான் வீராங்னை நவோமி ஒசாகா(2வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதிரடியாக விளையாடிய முன்னணி வீராங்கனை ஒசாகா முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் வசப்படுத்தினார். ஆனால் அடுத்த 2 செட்களிலும் ஆதிக்கம் செலுத்திய ஜில் 6-3, 6-3 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி ஆச்சர்யப்படுத்தினார்.
அதனால் 1-2 என்ற செட்களில் ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். கூடவே 2 மணி 4 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற்ற ஜில் காலிறுதிக்கு முன்னேறினார். மேலும் பெலிண்டா பென்சிக்(சுவிட்சர்லாந்து), பவுளா படோசா(ஸ்பெயின்), ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா), ஏஞ்சலிக் கெர்பர்(ஜெர்மனி) ஆகியோரும் காலிறுதிக்கு தகுதிப் பெற்றனர். ஆடவர் ஒற்றையர் பி ரிவு 3வது சுற்றில் ரஷ்ய வீரர் டானில் மெத்வதேவ்(2வது ரேங்க்) பல்கேரிய வீரர் கிரிகோர் திமித்ரோவ்(21வது ரேங்க்) ஆகியோர் விளையாடினர்.
ஒரு மணி 29 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் டானில் 6-3, 6-3 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். அதேபோல் பப்லோ கார்ரெனோ(ஸ்பெயின்), பெனாய்ட் பேர்(இத்தாலி), காஸ்பர் ரூத்(நார்வே) ஆகியோரும் காலிறுதியில் விளையாட உள்ளனர்.