×

வேளாண் துறையில் தொழில் முனைவோர் உருவாக்கப்படுவார்கள் 3 லட்சம் இளைஞர்கள் பயன்பெற ரூ.340 கோடியில் வேளாண் திட்டங்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 3 லட்சம் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூ.340 கோடியில் வேளாண் திட்டங்கள் தொடங்கப்படும். அதன் மூலம் வேலை கேட்கும் இளைஞர்கள் வேலை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது பதிலுறையில் தெரிவித்தார்.
 தமிழக சட்டப் பேரவையில் நேற்று வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசியதாவது:   தமிழக மக்கள் வேளாண் பட்ஜெட்டை பாராட்டுகிறார்கள். ஒரு சில உறுப்பினர்கள் வாழை சாகுபடிக்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை என்றார்கள். வாழை சாகுபடியை அதிகரிக்க ரூ.3 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.

திசு வளர்ப்புக்கு இரண்டரை கோடியும், வாழைத்தார் உரை அமைக்க ரூ.ஒன்ேற கால் கோடியும் ஒதுக்கப்படும். திருச்சியில் வாழைப்பழம் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும். கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். பல விவசாயிகளுக்கு தங்கள் விவசாய பொருட்களை நேரடியாக விற்பனை செய்யத் தெரியவில்லை. எனவே, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வேளாண் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அடுத்த 5 ஆண்டுகளில், பசுமை நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும். தரிசு நிலங்கள் அதிகமாக உள்ளது. அவை எல்லாம் மேம்படுத்தப்பட்டு, அதற்கு தேவையான குறைந்த செலவில் தண்ணீர் கிடைக்கும் வகையில் சோலார் அமைப்புகள் எல்லாம் ஏற்படுத்தி தந்து கொண்டிருக்கிறோம்.  

எனவே, இப்போதெல்லாம் இயற்கை விவசாயத்துக்கு மக்கள் மாறி வருகின்றனர். இயற்கை வேளாண் உற்பத்தி ஊக்கப்படுத்தப்படும். 3 லட்சம் இளைஞர்கள் பயன்பெற ரூ.340 கோடியில் பல்வேறு வேளாண் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதாவது, வேலை பெறுபவராக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக இளைஞர்கள் மாறுவார்கள். அடுத்த 6 மாதத்திற்குள் இதை நடைமுறைக்கு கொண்டு வருவோம். கரும்பு ஆலைகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1,125 கோடி வழங்க முத்தரப்பு கூட்டம் நடத்தி பேசி தீர்வு காணப்பட்டுள்ளது. நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய நெல் விதைகளை 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10ஆயிரம் விவசாயிகள் அரசு பண்ணை மூலம் பயன் பெறுவார்கள். நெல் ஜெயராமன் பெயரில் பாதுகாப்பு இயக்கத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.

 கடந்த ஆட்சியில் குடிமராமத்து பணி என்ற பெயரில் பனை மரங்களை எல்லாம் வெட்டி அழித்து விட்டனர். எனவே பனை மரங்களை பாதுகாக்க ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி பனை மரம் வெட்ட தடை விதிக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பனை மரங்கள் நீர் ஆதாரங்களை காக்கும். அதே போன்று, தென்னை மரங்கள் வெள்ளைப் பூச்சி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. அதை தடுக்க வேளாண் பல்கலைக்கழகம் மூலம் ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.  

திமுக அரசு உருவாக்கிய கருப்பு, சிவப்பு அரிசி
பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பதிலளித்த போது, பாரம்பரிய அரிசி வகைகளை பட்டியலிட்டார். அப்போது அவர், கருப்பு கவுனி அரிசி கருப்பு நிறத்திலும், மாப்பிள்ளை சம்பா அரிசி சிவப்பு நிறத்திலும் இருக்கும் என்றார். கருப்பு, சிவப்பு அரிசியை உருவாக்கியது திமுக தலைவர். திமுக கட்சி கொடியை போன்று அரிசியையும் திமுக அரசு உருவாக்கியுள்ளது என்பதை குறிப்பிட்டு பேசினார்.

நிவாரணம் எவ்வளவு?
மரவள்ளிக் கிழங்கில் மாவுப்பூச்சி  தாக்குதலுக்கு, ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் இன்று  அறிவிக்கப்பட்டிருக்கிறது. பயிர் காப்பீடு நிறுவனங்களுக்கு ரூ.178 கோடி  வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை  ரூ.107 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குறுவை சாகுபடி  பாதிக்கப்பட்டவர்களுக்கு, அடுத்த 10 நாட்களில் நிவாரணத் தொகை  வழங்கப்படும்.  2020-21ம் ஆண்டு சம்பா பயிர் பாதிப்புக்கு மத்திய அரசின்  நிதி வந்தவுடன் காப்பீடு தொகை வழங்கப்படும். இம்மாதம் 31-ந்தேதி வரை  பயிர்கள், தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். தமிழ்நாடு  கூட்டுறவு, பொது துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு  நிலுவைத் தொகை வழங்க ரூ.182.13 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு லட்சம் பனை விதை
தமிழக சட்டப் பேரவையில் நேற்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார். அப்போது, வேளாண் பட்ஜெட்டில் பனை மரம் வெட்ட தடை விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பேசினார். பனை மரம் குறித்து பேசிய போது, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ‘ ஆண்டுக்கு நானே ஒரு லட்சம் பனை விதைகளை அரசுக்கு தருகிறேன். அதை நீங்கள் உங்கள் துறையின் மூலம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதை அமைச்சர் ஏற்று கொள்வதாக கூறினார். அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து, சபாநாயகரைப் பார்த்து வேளாண் அமைச்சர் பல வி‌ஷயங்களை பேசியபோது வராத ஆர்வம் பனை மரத்தை பற்றி பேசும்போது மட்டும் சபாநாயகருக்கு வந்துவிட்டது என்றார். அதற்கு சபாநாயகர் சிரித்துக் கொண்டே ‘அதுதான் வாரிசு’ என்று கூறினார். இதனால் சபையில் சிரிப்பலை எழுந்தது.

Tags : Minister ,MRK Panneerselvam , Department of Agriculture, Entrepreneurs, Agricultural Projects, Minister MRK Panneerselvam
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...