×

ஓணம் பண்டிகையையொட்டி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடி உயர்வு!: ஒரு கிலோ மல்லிகை ரூ.1,800க்கு விற்பனை..!!

திண்டுக்கல்: ஆவணி மாத முதல் முகூர்த்தம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஏவெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, கலிக்கம்பட்டி, சின்னாளப்பட்டி, பெருமாள்கோயில்பட்டி, தவசிமடை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் திண்டுக்கல் பூ மார்கெட்டிற்கு பூக்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கு கொண்டுசெல்லப்படும்.

இந்நிலையில் ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் வெள்ளிக்கிழமையான நாளையும், நாளை மறுநாள் ஓணம் பண்டிகையும் கொண்டாடப்படுவதையொட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ தற்போது கிலோ 1,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஜாதிப்பூ, கிலோ 450 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்பனையான முல்லை பூ, 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பூக்களின் விலை உயர்வால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையிலும் பூக்களின் விலை 2 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. நேற்று கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஜாதிப்பூ இன்று 1,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை பூ 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் அரளி, கேந்தி, வாடாமல்லி, மரிக்கொழுந்து, தாமரை உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.


Tags : Angle Festivities Florist Market , Onam festival, Dindigul flower market, flower prices
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...