×

வெஸ்டர்ன் அன்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஸ்வரெவ், முகுருசா வெற்றி

சின்சினாட்டி:  வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றுப் போட்டிகளில் அலெக்சாண்டர் ஸ்வரெவ், டீகோ ஸ்வார்ட்ஸ்மேன், டேனில் மெட்வடேவ் ஆகியோர் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் கார்பின் முகுருசா, ஜெசிகா பெகுலா, அசரென்கா ஆகியோரும் 2 வது சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்று அதிகாலை நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றுப் போட்டியில் ஜெர்மனியின் முன்னணி நட்சத்திரம் அலெக்சாண்டர் ஸ்வரெவுடன், தென்னாப்பிரிக்க இளம் வீரர் ஹாரிஸ் மோதினார். முதல் செட்டை டைபிரேக்கரில் 7-6 என்ற கணக்கில் கைப்பற்றிய ஸ்வரெவ், 2வது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றி, ஹாரிசை வீழ்த்தினார்.

மற்றொரு 2ம் சுற்றுப் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவும், அமெரிக்க வீரர் மெக்கன்சி மெக்டொனால்டும் மோதினர். இதில் மெட்வடேவ் 6-2, 6-2 என நேர் செட்களில் மெக்டொனால்டை எளிதாக வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீரர் பிரான்சஸ் டியாஃபோவை 6-1, 4-6, 6-4 என 3 செட்களில் அர்ஜென்டினாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மென் வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் லொரென்சோ சொனேகோ, அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் ஆகியோரும் 2ம் சுற்றில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றுப் போட்டியில் ஸ்பெயினின் கார்பின் முகுருசாவுடன், பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா மோதினார். இதில் 6-4, 6-3 என நேர் செட்களில் முகுருசா வெற்றி பெற்றார்.

காயம் காரணமாக ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலேப் இத்தொடரில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். இதனால் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 2ம் சுற்றில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். மகளிர் ஒற்றையர் பிரிவு உலகத் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்காவை, தரவரிசையில் 31ம் இடத்தில் உள்ள ஸ்பெயினின் பாலா படோசா 5-7, 6-2, 7-6 என 3 செட்களில் வீழ்த்தி, அதிர்வலைகளை ஏற்படுத்தினார். செக். குடியரசின் பெட்ரா கிவிடோவா, பார்பரா கிரெஜ்சிகோவா, கரோலினா பிளிஸ்கோவா மற்றும் ஸ்விட்சர்லாந்தின் முன்னணி நட்சத்திரம் பெலிண்டா பென்கிக் ஆகியோரும் 2ம் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Tags : Western ,Southern Open ,Swarovski ,Mukurusa , Western and Southern Open tennis: Swarovski, Muguruza win 2nd round
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...