ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு, பகலாக மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை: எஸ்பி எச்சரித்தும் போலீசார் அலட்சியம்

ஆரணி: ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு, பகலாக போலீசார் துணையுடன் ஆற்று மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் மணல் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக எஸ்.வி.நகரம், குண்ணத்தூர், மேல்சீசமங்கலம், தச்சூர், மோட்டூர், வம்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் இருந்து போலீசார் துணையோடு மணல் கொள்ளை படுஜோராக நடைபெற்று வருகிறது.மேலும், மணல் மாபியா கும்பல் ஆற்று மணலை சலித்து குவியல், குவியலாக வைத்து மாட்டு வண்டிகள், டிராக்டர்கள், மினி வேன்களில் கடத்தி சென்று, ஒரு லோடு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறுகளில் இருந்து மணல் கொள்ளை அதிகளவில் நடைபெற்று வருவதாக எஸ்பி பவன்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ஆரணி டிஎஸ்பி, டவுன், தாலுகா, கண்ணமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் உள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தொடர்பு கொண்டு, மணல் கொள்ளையை முழுவதுமாக தடுத்து நிறுத்தாவிட்டால்  சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்திருந்தார்.எனவே, போலீசார் மாமூல் வாங்கும் மாபியாக்களை அழைத்து  நாங்கள் சொல்லும் வரை மணல் கொள்ளையை நிறுத்தி வைக்குமாறு தெரிவித்தனர். மீறி மணல் கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் என மாபியாக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆரணி பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றிலுமாக மணல் கடத்தல் தடுக்கப்பட்டது.இந்நிலையில், ஆரணி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்.வி.நகரம், குண்ணத்தூர், மேல்சீசமங்கலம், தச்சூர், மோட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் மீண்டும் மாட்டுவண்டிகளில்  மணல் கொள்ளை நடைபெற்றது.

தகவலறிந்த எஸ்பி பவன்குமார் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் உள்ள ஓப்பன் மைக்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக, போலீசார் ஒருவர் கூறியதாவது:ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் ஆற்று மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக எனக்கு அதிகளவில் புகார்கள் வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் தங்கள் எல்லையில் மணல் கொள்ளை நடக்கவில்லை என எழுத்து பூர்வமாக உறுதிமொழி கடிதத்தை கொடுத்துவிடுங்கள் அல்லது ஆரணி பகுதியில் மணல் கொள்ளையை முழுமையாக தடுத்துவிட்டு என்னிடம் தகவல் தெரிவியுங்கள்.அதேபோல், மணல் கொள்ளை குறித்து ஆரணி பகுதிகளில் இருந்து இனிவரும் நாட்களில் பொதுமக்கள் யாரும் எனக்கு புகார் தெரிவிக்கக்கூடாது. அவ்வாறு வரும் புகார் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லையில் மணல் கடத்தல் வாகனங்களை எனது தலைமையிலான தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை மற்றும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். இவ்வாறு எஸ்பி எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, டிஎஸ்பி உத்தரவின்பேரில் ஆரணி தாலுகா காவல் நிலைய எல்லையில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட  30க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு மட்டும் செய்தனர். ஆனால், ஒருவரை கூட போலீசார் கைது செய்யாமல் இருந்து வருகின்றனர். மேலும், எஸ்பி ஓப்பன் மைக்கில் பேசி எச்சரித்துள்ளதால், தங்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில்  கண் துடைப்பிற்காக, தாலுகா போலீசார் தினமும் மணல் கடத்தல் ரோந்து செல்வதாகவும், மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருவதாக எஸ்பிக்கு தகவல் தெரிவிப்பதற்காக, மாமூல் கொடுக்காத சில மாட்டு வண்டிகளை பிடித்து வைத்து, கணக்கு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர, மணல் கடத்தலில் சிக்கும் நபர்களின் வண்டிகளை மட்டும் பறிமுதல் செய்து வைத்து கொண்டு, அவர்களிடம் பெரியளவில் பேரம் பேசி பணத்தை பெற்றுக்கொண்டு அனுப்பிவிட்டு,  அவர்கள் தப்பியோடி விட்டதாகவும், சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருவதாகவும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விடுகிறார்களாம். மணல் கடத்தலில் ஈடுபடுவர்களை கைது செய்யாமல், அவர்களுடன் கைகோர்த்து கொண்டு எஸ்பி உத்தரவை அலட்சியம் செய்து வரும் தாலுகா போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரணி பகுதிகளில் ஆற்று மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More