×

சிவகங்கை அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு; காளை முட்டி 10 பேர் காயம்: 6 பேர் மீது வழக்கு

சிவகங்கை: சிவகங்கை அருகே கோயில் திருவிழாவையொட்டி அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் கோமாளியம்மன் மற்றும் மண்டை கருப்பணசாமி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்தப்படும். கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டாக நடைபெறவில்லை. இக்கோயிலில் நேற்றுமுன் தினம் ஆடி திருவிழா நடந்தது. இதையொட்டி கோமாளிபட்டி கண்மாயில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

இதற்காக சிவகங்கை, இடையமேலூர், ஓக்கூர், சக்கந்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. கண்மாய் பகுதியில் காளைகள் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. இதனை இளைஞர்கள் அடக்கினர். காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கோமாளிபட்டியை சேர்ந்த  மாணிக்கம், வேலப்பன், முனியாசமி உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Sivagangai , 10 injured in Manchurian bullfight near Sivagangai
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி