×

டீசல் விலை உயர்வால் போர்வெல் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: 2,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு

கோபி:  டீசல் விலை உயர்வால் ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் போர்வெல் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டம் கோபி, திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கொடு ஆகிய பகுதிகளில்தான் ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணியில் ஈடுபடும் போர்வெல் வாகனங்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து தான் பல்வேறு மாநிங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்காக போர்வெல் வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை எட்டி உள்ள நிலையில் போர்வெல் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் கோபி, சத்தியமங்கலம், நம்பியூர் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்களுடன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், ‘‘ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 80 முதல் 100 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. 500 அடி ஆழத்திற்கு போர் போட வேண்டும் என்றால் சராசரியாக 500 முதல் 600 லிட்டர் டீசல் தேவைப்படும். இதுதவிர, ஒரு போர்வெல் வாகனத்திற்கு சராசரியாக 5 முதல் 7 ஆட்கள் வரை தேவை. கூலி ஆட்களுக்கு சம்பளம், டீசல் என தினமும் பல ஆயிரம் ரூபாய் தேவைப்படும். இப்படி டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றால் தொழிலே நடத்த முடியாத நிலை ஏற்படும். இதை சரிகட்ட கட்டணத்தை உயர்த்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’’ என்றனர்.  போர்வெல் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

Tags : Bourwell , Due to high diesel prices Borwell vehicle owners strike: 2,000 workers lose their jobs
× RELATED போர்வெல் குழியில் தவறி விழுந்த 4 வயது...