×

அதிமுக அளித்த வாக்குறுதிகளான இலவச செல்போன், இலவச மினரல் வாட்டர் உள்ளிட்டவை என்னாச்சு ?: முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை : கொடுத்த வாக்குறுதியில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொதுவிவாதம் தொடங்கியது. நிதிநிலை அறிக்கைகள் மீது இன்று தொடங்கிய விவாதம் வரும் 19ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில் சட்டப்பேரவை பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார், “நிதிநிலை அறிக்கை என்பது குட்டிப்பூனையை தாய்ப்பூனை கவ்வுவது போல் இருக்க வேண்டும் ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பூனை எலியை கவ்வுவது போல உள்ளது. எனக்கு பொருளாதாரம் தெரியாது, ஆனால் மக்களின் பசியும், ஏழ்மையும் தெரியும்.டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அடிப்படையே அதிமுக அரசு கொண்டு வந்த மடிக்கணினி திட்டம் தான்” என்றார்.

அதிமுக உறுப்பினர் ஆர்.பி உதயகுமார் எழுப்பிய கேள்விக்கு பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலில், “அதிமுக ஆட்சியில் இலவச செல்போன் கொடுக்கும் என கூறினீர்கள் கொடுத்தீர்களா? மோனோ ரயில் கொண்டு வருவோம் என சொன்னீர்கள் கொண்டு வந்தீர்களா? ஆவின் பால் விலை குறைப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றுனீர்களா?,அதிமுக ஆட்சி நிறைவேற்றாமல் விட்ட வாக்குறுதிகளின் பெரிய
பட்டியலே உள்ளது.
 
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து எக்காரணத்தாலும் பின்வாங்க மாட்டோம்.நிதி பற்றாக்குறையை சரி செய்து தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிச்சயமாக நிறைவேற்றுவோம். வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை எனக்கூறி நாங்கள் தப்பித்துக்கொள்ள பார்க்கவில்லை. அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடியில் பல குறைகள் உள்ளன. அதை எல்லாம் சரி செய்து பிறகு கடன் தள்ளுபடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகள் ஆதாரத்துடன் மானியக்கோரிக்கை விவாதத்தில் எடுத்துரைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Tags : CM BC ,Q. ,Stalin , வாக்குறுதி
× RELATED ரூ.8 லட்சம் மோசடி: பெண் காவலர் மீது வழக்கு