×

பள்ளிகள் திறப்பது குறித்து 20-ம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது குறித்து 20-ம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அரவிந்தரின் 150-வது பிறந்த தினயொட்டி தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர் சமாதியில் இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரவிந்தர் இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டதோடு ஆன்மிக யோகியாகவும் இருந்து வழிகாட்டியவர். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை “ஆஜாதி கா அம்ரித் மகோத்சவ்“ என்ற பெயரில் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் சொல்லி இருக்கிறார்.

அதனையொட்டி புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்பட இருக்கிறது. அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி மத்திய கலாச்சாரத் துறை ஒரு குழுவை அமைத்து ஆண்டு முழுவதும் இது விழாவாகக் கொண்டாடப்படும் என்று கூறியிருக்கிறது. முதல்வருடன் கலந்தாலோசித்து புதுச்சேரியிலும் அதே போல ஓராண்டு முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன். அதற்கான திட்டமிடலும் இருக்கும். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி போடுவதாக இலக்கு நிர்ணயித்து செயல்பட்டோம். தற்போது 60 சதவீதம் போட்டிருக்கிறோம்.

இதுவும் ஒரு சாதனைதான். தளர்வுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. நம்முடைய நடவடிக்கைகளால் 38 கிராமங்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கிராமங்களாக மாறியிருக்கின்றன. இரவில் சென்று தடுப்பூசி போடும் முறையும் புதுச்சேரியில்தான் நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். கல்வி நிறுவனர்கள், துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள் அனைவரையும் கலந்தாலோசனை செய்து 20-ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க பள்ளிக் கல்வித்துறையைக் கேட்டு இருக்கிறேன். அதன் பிறகு முடிவெடுக்கப்படும்.

பள்ளிகளைப் பொருத்த மட்டில் அவசரமாக திறக்க முடியாது. சில மாநிலங்களில் திறந்து விட்டு மூடியிருக்கிறார்கள். சில மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திறக்க இருக்கிறார்கள். மேலும், புதுச்சேரியில் தமிழக பள்ளிக் கல்வி திட்டத்தோடும், மாஹேயில் கேரளாவோடும், ஏனாமில் ஆந்திராவோடும் இணைந்து இருக்கிறது. அதனால் அவர்கள் எப்போது பள்ளிகள் திறக்கிறார்கள் என்று கவனித்து செயல்பட வேண்டியதும் அவசியம். அவர்கள் திறந்தும் நாம் திறக்கவில்லை என்றால் மாணவர்களுக்கு பாடங்கள் பாதிக்கப்படும். அவற்றையும் கருத்தில் கொண்டு 20-ம் தேதிக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்திருக்கிறார்கள்.

நான்கு மாதங்களுக்கு முன்பாகவே வாட் வரியை 2 சதவீதம் குறைத்து ரூ. 2.80 பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டையும் குறைத்தோம். மக்களுக்கு இன்று வரை அது மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. புதுச்சேரியைப் பொருத்தமட்டில் குடியரசு தலைவரின் ஆட்சியின் போதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கும் போதும் மக்களுக்கான நல்ல திட்டங்களை முன்னெடுத்து செல்ல முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.’’இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். முன்னதாக ஆளுநர் தமிழிசை மணக்குள விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். பின்னர் அங்குள்ள கோயில் யானைக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார்.

Tags : Soundarajan ,Governor ,Vuadachcheri , Decision on opening of schools after 20th: Puducherry Deputy Governor Tamilisai Saundarajan interview
× RELATED 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!