×

நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் வருமா? பயணிகளிடம் கட்டண கொள்ளையை தடுக்க கோரிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் கட்டண கொள்ளையை தடுக்க ப்ரீ பெய்டு ஆட்டோ திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் மிக அதிகமாக உள்ளது. இதில் மற்ற நகரங்களை விட, குமரி மாவட்டத்தில் தாறுமாறான கட்டணம் வசூலிக்கிறார்கள். குறைந்த பட்சம் கட்டணம் ரூ.40, 50 என்ற நிலையில் இருந்து மாறி தற்போது ரூ.60 என நிர்ணயம் செய்துள்ளனர். பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் இருந்து செல்ல இவ்வளவு தான்? கட்டணம் என்றில்லை. நெஞ்சம் பதறும் வகையில் ஆட்டோ டிரைவர்கள் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளனர். நியாயமான கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில், ஒரு சில ஆட்டோ டிரைவர்களின் இந்த அடாவடி கட்டணம் வசூல் பயணிகளை மிகவும் துன்பத்துக்கு உள்ளாக்கி உள்ளது.

பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள ஆட்டோக்களை முதலில் முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் சந்திப்பு, நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் மாநகர பகுதிகளுக்கு செல்லவோ, மாநகர பகுதிகளில் இருந்து இந்த ரயில் நிலையத்துக்கு வரவோ போதுமான பஸ் வசதிகள் கிடையாது. கோட்டார் சந்திப்பு ரயில் நிலைய சாலை என்பது, மாநகராட்சி மற்றும் ரயில்வே என இரு தரப்புக்கும் சொந்தமாக இருப்பதால் ஒரு புறம் போக்குவரத்தும், மறுபுறம் குடோன்களுக்கு லோடு இறக்கும் லாரிகள் நிறுத்தமாகவும் உள்ளது. இதனால் ரயில் நிலையம் செல்ல போதிய சாலை மற்றும் போக்குவரத்து வசதி இல்லாமல் பயணிகள் திண்டாடி வருகிறார்கள்.

இதனால் ஆட்டோ அல்லது வாடகை கார்களை நம்பி தான் பயணிகள் உள்ளனர். அவ்வப்போது முக்கிய ரயில்கள் வரும் சமயத்தில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு இது போதுமானதாக இல்லை. இதனால் பயணிகள் ரயில் நிலையத்தில் இறங்கி வாடகை கார்கள், ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கு செல்கிறார்கள். இவ்வாறு பயணம் செய்யும் போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என கூறி தாறுமாறான கட்டணம் வசூலிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மற்ற நகரங்களை விட நாகர்கோவிலில் அதிக ஆட்டோ கட்டணம் உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

முறைப்படுத்தப்படாத கட்டணம் வசூலிக்கப்படுவதால், பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். எனவே நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதே நிலை தான் டவுன் ரயில் நிலையத்திலும் உள்ளது. அனந்தபுரி எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல முக்கிய ரயில்கள் டவுன் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதனால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் பயணிகள் பஸ் வசதி இல்லாததால், ஆட்டோக்களை தான் பயன்படுத்துகிறார்கள். இங்கும் சில ஆட்டோ டிரைவர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.

இது குறித்து பயணிகள் சங்கத்தின் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ரயில்வே துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பதிலளித்த அதிகாரிகள், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு திட்டம் தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக கூறி இருந்தனர். ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் நடைமுறைக்கு வந்தால், அதிகளவில் பயணிகள் கட்டணம் கொடுக்க வேண்டி இருக்காது. ஆட்டோ டிரைவர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, நியாயமான கட்டணம் வசூலிக்கப்படும் என்று பயணிகள் சங்கத்தினர் கூறினர்.

ஆனால் ப்ரீபெய்டு திட்டம் இன்னும் நடைமுறைக்கு வர வில்ைல. இதே நிலை தான் வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்களிலும் உள்ளது. 2 கி.மீ. தூரம் கூட இல்லாத பகுதிக்கு ரூ.100க்கு மேல் கட்டணம் கேட்கிறார்கள். 3 பேரை தான் ஆட்டோக்களிலும் ஏற்ற வேண்டும். அதற்கு மேல் ஏற்ற மாட்டோம். மற்றொரு ஆட்டோ தான் பிடிக்க வேண்டும் என பயணிகளிடம் கறாராக பேசும் ஆட்டோ டிரைவர்கள் சிலர், பள்ளி வேலை நாட்களில் புளி மூட்டையை அடைத்து வைப்பது போல் குழந்தைகளை அடைத்து வைத்து செல்கிறார்கள். இதை காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறது. ஏற்கனவே வடசேரி , மீனாட்சிபுரம் பஸ் நிலையங்களில் ஒரு கி.மீட்டருக்கு இவ்வளவு என ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்ய, மாவட்ட கலெக்டராக நாகராஜன் இருந்த சமயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இதை முறையாக அமுல்படுத்த வில்லை.

இதனால் அதிகளவில் கட்டண கொள்ளை நடக்கிறது. எனவே முதற்கட்டமாக மிகப்பெரிய சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து ப்ரீபெய்டு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், ஆட்டோ, வாடகை கார் தொழில் பல்வேறு வகையில் நசுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் புதிய விதிமுறைகள் வாகன தொழிலை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளன. பல்வேறு வித கட்டணங்களால் ஆட்டோ டிரைவர்கள் நொடிந்து போய் உள்ளனர். இருப்பினும் பயணிகள் நலன் கருதி நியாயமான கட்டணம் தான் வசூலிக்கிறோம். தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

The post நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் வருமா? பயணிகளிடம் கட்டண கொள்ளையை தடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagarkovo ,Nagarko ,Tamil Nadu ,Kumari ,Nagercoil ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை!