×

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 24 பேர் உட்பட 208 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ், பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்கள் மற்றும் இதர பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள், பட்டாசாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு கோயில்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 172 பேருக்கும், கருணை அடிப்படையில் 12 பேருக்கும் பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின்பேரில் கோயில்களில் உள்ள காலி பணியிடங்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அறநிலையத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு இளைஞர்கள் பலர் விண்ணப்பித்தனர். இதை தொடர்ந்து அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதில், முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 208 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி பசுமைவழிச்சாலையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில்  இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கோயில்களில் பணிபுரிவதற்காக கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட அனைத்து சாதியினை சார்ந்த 24 அர்ச்சகர்கள், இதர பாடச்சாலையில் பயிற்சி பெற்ற 34 அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாசாரியார்களுக்கும், 20 ஓதுவார்கள், 17 பரிசாரகர், நய்வேத்யம், சுயம்பாகம் ஆகியோருக்கும், 23 திருவலகர்கள், 25 காவல், நந்தவனம் பராமரிப்பு, தோட்ட பணியாளர்களுக்கும், 28 தவில், நாதஸ்வரம் (மேளம் செட்), சுருதி ஆகியோருக்கும், 2 திருமஞ்சனம், 3 ஸ்தானிகம், 7 மணியம், ஊழியம், எழுத்தர், சீட்டு விற்பனை ஆகியோருக்கும், 3 பரிகலம், 2 மாலை கட்டி, 3 சுப்பரபாதம், தேவபாராயணம், அத்யாபாகர் ஆகியோருக்கும், 3 திருவடி, வில்லம், உக்ராணம், 1 குடைகாரர், 1 யானை பாகன், கருணை அடிப்படையில் 12 பேர் என மொத்தம் 208 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக 75 பேருக்கு பணிநியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  

மேலும், உயிரிழந்த 3 பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்துக்கான குடும்ப நலநிதியும், 5 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் த.வேலு, பிரபாகர ராஜா, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், தவத்திரு குமரகுருபர சுவாமிகள், ஆன்மிக பேச்சாளர்கள் சுகி சிவம், தேச மங்கையர்க்கரசி, அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். உயிரிழந்த 3 பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்துக்கான குடும்ப நலநிதியும், 5 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tags : Chief Minister ,MK Stalin , Appointment order for 208 persons, including 24 trained priests under the All Castes Priesthood Scheme: Chief Minister MK Stalin
× RELATED மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு...