கொரோனா தாக்கம் முடிவடைந்தவுடன் தமிழகத்தின் கடன் சுமையை சரி செய்ய முக்கிய சீர்திருத்தம் எடுக்கப்படும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாவது:

*நெடுஞ்சாலைத் துறை, நீர்ப்பாசனத் துறை மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், தவறான நோக்கோடு, முழுமையாக திட்டமிடாத அரைகுறையான பல்வேறு திட்டங்களுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது, மூலதன செலவின பொருளாதார ஊக்குவிப்பு என்ற பெயரில், கடைசி நேரத்தில், தவறான எண்ணத்தில் அரைகுறையான திட்டங்களுக்கு முந்தைய அரசால் ஒப்பளிப்பு அளிக்கப்பட்டன. இத்தகைய திட்டங்களை நாங்கள் கவனமாக ஆராய்ந்துள்ளோம். விரிவான முறையில் செலவின ஆதாய பகுப்பாய்வு அடிப்படையில் உண்மையாகவே பயன்தரக்கூடிய திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்படும். எனவே மூலதனச் செலவினங்களுக்காக இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.43,170.61 கோடி திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 42,180.97 என குறைக்கப்பட்டுள்ளது.

* இந்த அடிப்படையில், 2021-22ம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை ரூ.92,529.43 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கு பதிலாக திரும்ப செலுத்தப்படும் கடனாக எதிர்பார்க்கப்படும் ரூ.8,095.00 கோடி இந்த நிதிப் பற்றாக்குறையில் சேர்க்கப்படவில்லை. இந்தக் கடனை மாநில தொகுப்பு நிதியிலிருந்து திரும்ப செலுத்துவதில்லை. இதை, ஒன்றிய அரசின் பொறுப்பிலுள்ள இழப்பீட்டு மேல்வரி நிதியத்திலிருந்து செலுத்தப்படும்.

* பதினைந்தாவது நிதிக்குழுவின், நிதி மேலாண்மைப் பாதையின்படி, மாநிலங்களுக்கு 4 சதவீதம் நிதிப் பற்றாக்குறை அனுமதிக்கப்பட்டுள்ளது. மின் துறையில் திருத்தங்களை அரசு மேற்கொண்டால், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதம் கூடுதல் கடன் வாங்குவதற்கு அனுமதிக்கப்படும். அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாநிலங்கள் கடன் வாங்குவதன் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை இந்த அரசு எதிர்த்தாலும், ஒன்றிய அரசிடமிருந்து பெறப்பட்ட விரிவான வழிகாட்டுதல்களை ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், மின் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தத்தினால், 0.5 சதவீத மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கூடுதல் கடன் மதிப்பீடான 0.35 சதவீதத்தை, வேளாண் துறைக்கு இலவசமாக மின்சாரம் வழங்கும் நமது அடிப்படையான கொள்கையில் பாதிப்பு ஏற்படாமல் தமிழ்நாட்டால் பெற இயலும் என்று நாங்கள் புரிந்து கொண்டோம். இதன் அடிப்படையில், 2021-22ம் ஆண்டிற்கு நிதிப் பற்றாக்குறை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.33 சதவீதம் என, பதினைந்தாவது நிதிக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஒட்டு மொத்த விதிகளுக்குள் நிதிப்பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும்.

*  கோவிட்-19 பெருந்தொற்று நோயின் தாக்கம் முடிவடைந்தவுடன், தமிழகத்தின் கடன் சுமையை தாமதமின்றி சரி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 2.29 லட்சம் மனுக்கள் மீது தீர்வு

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் அரசின் ஒரு முக்கிய அடையாளம் இந்த திட்டத்தின் கீழ், மொத்தம் 4,57,645 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உரிய சரிபார்த்தலுக்கு பின்னர் 2,29,216 குறைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளன. முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட அனைத்து குறைதீர் மனுக்களுக்கும் இந்த அரசு பதவியேற்ற நூறு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது. மனுக்களுக்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மட்டுமல்ல, மனநிறைவளிக்கும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது. இந்த அரசு இனி வரும் காலங்களிலும் இதே முறையில் சிறப்பாக செயல்படும் என்பதற்கு இந்த சாதனை ஒரு சிறந்த அடையாளமாகும்.

Related Stories:

More